சிரியாவில் உள்நாட்டு போர் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அசாத், `பரிசுத்த ஆன்மாக்கள் தோற்கடிக்கப்படாது’ என்று ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியாவின் சர்வாதிகர அரசுக்கு எதிராக தொடர்ந்து அந்நாட்டில் இருக்கும் கிளர்ச்சி குழுக்கள் கலகம் செய்து வருகின்றன. மேலும், நேரடி ஆயுதப் போரிலும் இரு தரப்பும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த கிளர்ச்சி அமைப்புகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம் சிரிய அரசுக்கு, ரஷ்ய அரசு நேசக்கரம் நீட்டி வருவதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ, தினம் தினம் அப்பாவி பொது மக்கள் சிரியாவில் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக ஏப்ரல் 7-ம் தேதி சிரிய அரசு, கிளர்ச்சியாளர்கள் இருக்கும் பகுதிகளில் ரசாயன குண்டுகளை வீசியது. இதில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், `சிரிய அரசு, அப்பாவி பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசியுள்ளது.
எனவே, எங்கிருந்து ரசாயன குண்டுகள் வீசப்பட்டனவோ, அதே இடத்தை குறி வைத்து தாக்குதல் நடத்த சிரியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால், போரின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் ட்ரம்ப்பின் ட்வீட்டுக்கு ரிப்ளை கொடுக்கு வகையில் பஷார் அல்-அசாத், ` பரிசுத்த ஆன்மாக்கள் தோற்கடிக்கப்படாது’ என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். இந்த வார்த்தைகளுக்குள் என்ன அர்த்தம் ஒளிந்திருக்கிறது என்பது அசாத்துக்கு மட்டுமே வெளிச்சம்.