பாகிஸ்தானில் விமான பயணத்தின்போது, வானில் திடீரென தோன்றிய தட்டு ஒன்றை விமானி வீடியோ எடுத்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி ஏப்பஸ் ஏ-302 விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானமானது ரகீம் யார் கான் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, வானில் திடீரென அடையாளம் காணமுடியாத பறக்கும் தட்டு ஒன்று தோன்றியுள்ளது. இதனை கண்டு விமானத்தை இயக்கி வந்த பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது குறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கும் விமானி தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விமானி கூறுகையில், சூரியஒளி இருக்கும்பொழுது அதனை விட மிக பிரகாசமுடன் அந்த பறக்கும் தட்டு காணப்பட்டது. பகற்பொழுதில், விமான பயணத்தில் இதுபோன்ற அதிக பிரகாசம் கொண்ட பொருள் ஒன்றை காண்பது மிக
அரிது. வானில் தென்பட்ட அந்த பொருள் கிரகம் இல்லை. ஆனால், பூமிக்கு அருகே காணப்படும் விண்வெளி நிலையம் அல்லது ஒரு செயற்கை கிரகம் ஆக கூட அது இருக்கலாம் என்றார். விமானி வீடியோ எடுத்தது போக, ரகீம் யார் கான் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளும் பறக்கும் தட்டை கண்டு தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவன செய்தி தொடர்பு அதிகாரி கூறுகையில், அது பறக்கும் தட்டா அல்லது வேறு எதுவும் இருக்கிறதா? என உறுதியாக கூற முடியாது. அந்த பொருள் என்ன என்பது பற்றி உடனடியாக எதுவும் கூறிவிட முடியாது. உண்மையில், அந்த பொருள் என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை. எனினும் வானில் ஏதோவொன்று தென்பட்டு உள்ளது. அதுபற்றி விதிமுறைகளின்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.