கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து மிக விரைவில் அதை நாட்டு மக்களுக்கு வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றுக்கு சர்வதேச அளவில் பெரும் புகழ் கிடைத்துள்ளது. கடந்த இரு வாரங்களாக நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா நோய் தடுப்பில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பு மருந்துக்கு பக்க விளைவுகள் அதிகமாக இல்லாததால் பல நாடுகள் இதை வாங்குவதற்கு போட்டி போட்டு வருகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் தடுப்பூசியை வாங்க வரிசையில் காத்திருக்கின்றன. நம் அண்டை நாடுகளுக்கும் பிரேசில், சவுதி அரேபியா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கு இந்திய பிரதமரை மோடியை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடியை டெலிபோனில் அழைத்த நெதன்யாகு, சொந்த நாட்டுக்காக கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதை உடனடியாக மக்களின் பயன்பாட்டுக்காக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் சமீபத்தில் டெல்லியில் தங்கள் நாட்டு தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் அவர் கேட்டறிந்தார். குண்டு வெடிப்பை தொடர்ந்து தங்களுடைய நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பை அதிகரித்ததற்கு அவர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.