ரஷ்யாவில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பணிபுரியும் 7 பேருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவது இது தான் முதல் முறை என கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா பீதி உலக நாடுகளில் இன்னும் அகலாத நிலையில், பறவைக் காய்ச்சல் மனிதர்களிடையே பரவியுள்ளது உலக சுகாதார நிறுவனத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக பறவைக் காய்ச்சல் கோழி, வாத்து, காகம் உள்பட பறவைகளுக்குத் தான் பெரும்பாலும் பரவும். இந்தக் காய்ச்சல் பரவினால் பறவைகள் கொத்துக் கொத்தாக செத்து விழும். இந்த காய்ச்சல் பெரும்பாலும் மனிதர்களுக்கு பரவுவது கிடையாது. இந்தியாவில் கேரளா, காஷ்மீர் மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும், ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளிலும் சமீபத்தில் பறவைக் காய்ச்சல் பரவியது.
இதையடுத்து இங்கு பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கேரளாவில் ஆயிரக்கணக்கான கோழிகள், வாத்துகள் உள்பட பறவைகள் கொல்லப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. இதன் காரணமாக கேரளாவில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். தற்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் அதிகமாக பரவவில்லை. இந்நிலையில் உலகிலேயே முதன் முறையாக ரஷ்யாவில் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவி உள்ளது. தெற்கு ரஷ்யாவில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பணிபுரியும் 7 பேருக்கு இந்தக் காய்ச்சல் பரவி உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை ரஷிய சுகாதாரத் துறை அமைப்பான ரோஸ்போட்ரெப்நாட்சர் தலைவர் அன்ன போபோவா தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளபோதிலும் அவர்களது உடல் நிலை சீராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கோழிப் பண்ணையில் உள்ள கோழி இறைச்சி மூலம் எச் 5 என் 8 என்ற இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கோழிப் பண்ணையில் கடந்த டிசம்பர் மாதம் பறவைகளுக்கு காய்ச்சல் பரவியது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பீதி இன்னும் பல உலக நாடுகளில் குறையாத நிலையில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.