2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரத்தின் உலக வர்த்தக மையத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தொடர்புடைய ஒருவர் சிரியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் செய்தி தொடர்பாளர் எரிக் பஹோன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற சிரிய மக்கள் படை, முகமது ஹேடர் ஸாமர் என்பவரை ஒரு மாத காலத்திற்கு முன்னரே கைது செய்துள்ளது. இவர் சிரியாவில் பிறந்த ஜெர்மானியராவார்.
இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்டோருக்கு பண உதவி செய்ததோடு, அல் கொய்தா நடவடிக்கைகள் குறித்து தகவல் பரிமாற்றம் செய்து உதவிய ரம்ஸி பினால்ஸிப் மற்றும் தாக்குதலை முன்னின்று நடத்திய முகமது அட்டா ஆகியோருக்கும் இவருக்கும் தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது என்றும், இது குறித்து அதிக தகவல்களை எதிர்பார்த்திருப்பதாகவும் எரிக் கூறியுள்ளார்.