கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா முகநூல் பயனர்களின் தரவுகளை பயன்படுத்தியதை பற்றி எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, தங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? பலரோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறதா என்ற அச்சம் அனைவரிடமும் இருக்கிறது. இதோ, ஃபேஸ்புக் நிறுவனம் தந்துள்ள சில விளக்கங்கள்...
உங்கள் தரவுகளை ஃபேஸ்புக் விற்கிறதா?
பயனர்கள் பற்றிய தரவுகளை விற்பதில்லை என்பது தொடக்கம் முதல் தங்களுடைய விளம்பர கொள்கைகளுள் ஒன்று என ஃபேஸ்புக் கூறுகிறது.
வணிக நிறுவனங்களோடு அல்லது விளம்பரதாரர்களோடு உங்கள் தகவல்களை ஃபேஸ்புக் பகிர்ந்து கொள்கிறதா? எப்போது?
வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள், முகநூல் பக்கங்கள், பதிவுகளை பயனர்கள் எந்த அளவு பார்க்கிறார்கள் என்பதுபோன்ற பொதுவான தகவல்களை தொகுத்து ஃபேஸ்புக் தருகிறதேயன்றி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தருவதில்லை.
உங்களைப் பற்றி என்னென்ன தரவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருக்கும்?
‘செட்டிங்’ பகுதியில் Ad preferences என்னும் விளம்பர முன்னுரிமை பகுதி உண்டு. எந்த நிறுவனத்தின் விளம்பரங்களை நீங்கள் ‘கிளிக்’ செய்கிறீர்கள்? யாருடைய இணையதளம் அல்லது செயலியை பயன்படுத்துகிறீர்கள் என்பது போன்ற தகவல்களை அறிய முடியும்.
பதிவுகள், பதில்கள், தேடுதல் போன்றவை பயனர்கள் பாதுகாப்பாக செய்ய வழி இருக்கிறது. தேவையில்லாதவை என்று கருதபவற்றை எப்போது வேண்டுமானால் time line பகுதியில் அழித்து விட முடியும். ஃபேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள், பதிவுகள், தொடர்புகள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைக்க வசதி இருக்கிறது.
தங்கள் விளம்பரத்தை எத்தனைபேர் பார்த்தார்கள் என்ற விவரத்தை விளம்பரதாரர்கள் பெற முடியுமா?
30 வயதுக்கு மேற்பட்ட இத்தனை பெண்கள் உங்கள் விளம்பரத்தை பாரத்தனர். உங்கள் விளம்பரத்தை பார்த்த 15 பேரில் 10 பேர் வீடியோவை 10 நொடிக்கு மேலாய் பார்த்தார்கள் போன்ற பொதுப்படையான விவரங்களையே ஃபேஸ்புக் தரும். தனிப்பட்ட தகவல்களை தருவதில்லை.
தனிப்பட்ட பதிவுகளை பொறுத்து, உங்களுக்கேற்ற விளம்பரத்தை அனுப்புமா?
பயனர்களிடையேயான தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை (இன்ஸ்டாகிராம், மெசஞ்சர், வாட்ஸ்அப்) விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதில்லை.
உங்கள் செல்பேசியின் மைக்ரோபோனை ஃபேஸ்புக் பயன்படுத்தி, உங்கள் உரையாடலை கேட்கிறதா?
ஏதாவது ஒலி கோப்புகளை கேட்பதற்கு செல்போன் செயலில் மைக்ரோபோனை பயன்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் தவிர, ஒருபோதும் மைக்ரோபோன் செயல்படாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, உங்கள் தேவைக்கேற்ப மைக்ரோபோனை பயன்படுத்தும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்து விட்டது.
உங்கள் அழைப்பு விவரங்களை தனது விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக் பயன்படுத்துகிறதா?
உங்கள் செல்பேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை விளம்பர தகவல்களுக்கு ஃபேஸ்புக் பயன்படுத்துவதில்லை. ஆனால், ஒரு விளம்பரதாரர் மொத்தமாக பயனர் விவரங்களை தரும்போது, சரியான நபருக்கு அது சென்று சேர்வதற்கு உதவி செய்ய, தொடர்பு விவரங்களை ஃபேஸ்புக் பயன்படுத்துகிறது.
இன்ஸ்டாகிராம் செய்வது போல ஃபேஸ்புக்கும் உங்களுக்கேற்ற விளம்பரங்களை அனுப்புமா?
இன்ஸ்டாகிராமும் ஃபேஸ்புக்கும் ஒரே வகையான விளம்பர அணுகுமுறையே கொண்டிருக்கின்றன. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வேறு செயலிகளில் உங்கள் தேடுதல்கள், செயல்பாடுகளுக்கேற்ப விளம்பரங்கள் அனுப்பப்படுகின்றன. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் விளம்பர முன்னுரிமை, தகவல்களை மறைக்கும் தெரிவு ஆகியவற்றை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
மெசஞ்சரை போன்றே ஃபேஸ்புக்கும் விளம்பரங்களை தருகிறதா?
மெசஞ்சர் தன் முதற்பக்கத்தில் தருவதை போன்றே ஃபேஸ்புக்கும், பயனர் தன்னைப் பற்றி பதிந்துள்ள விவரங்கள், பயனருக்கு பிடித்தமான இசை, பயனரின் செயல்பாடுகள், அவரது தொடர்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பொருத்தமான விளம்பரங்களை அனுப்புகிறது.