உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பிடன் வட கொரியா தாக்கல் செய்துள்ள அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது வடகொரியா. ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக வடகொரியா கூறுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது கேள்வியாகவே உள்ளது. இது ஒருபுறம் இருக்க உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது வட கொரியா. அந்த அறிக்கையில், இப்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வடகொரியாவில் 23,121 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.
கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 732 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்றார்.