திங்கள்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் தாறுமாறாக ஓடிய வேன். நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவர்கள் மேல் மோதியதில் பத்து பேர் பரிதாபமாக பலியாகினர். பதினைந்து பேர் காயமுற்றனர்.
கனடா நாட்டின் டொரண்டோ நகரில் நார்த் யோர்க் பகுதியில் யோங் தெருவும் ஃபிஞ்ச் அவென்யூவும் சந்திக்கும் இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வாடகை வேன் ஒன்றை ஓட்டி வந்து அப்பாவி மக்கள் பலியாக காரணமான 25 வயது இளைஞரான அலெக் மினஸ்ஸியான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒண்டாரியோவிலுள்ள ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்தவர்.
டொரண்டோ காவல்துறை தலைவர் மார்க் சாண்டர்ஸ், "வாகனம், யோங் தெருவின் வடக்கு பக்கத்திலிருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி சென்றுள்ளது. நடைமேடையின் மீது ஏறியும், வடக்கு நோக்கி வாகனங்கள் செல்லக்கூடிய பகுதி வழியாகவும் தாறுமாறுமாக சென்றுள்ளது. சாலை விதிகள் மீறப்பட்டுள்ளன," என்று தெரிவித்துள்ளார்.
சன்னிபுரூக் ஹெல்த் சயன்ஸஸ் மையத்திற்கு கொண்டு வரப்பட்ட பத்து பேரில், இருவர் மருத்துவமனையில் மரணமடைந்ததாக தலைமை மருத்துவ அதிகாரி டான் காஸ் அறிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ, மரணமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.