அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றதும் 2017 ஜனவரி மாதம், ஈராக், ஈரான், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு பயணிகள் வருவதற்கு டொனால்டு டிரம்ப் 90 நாட்கள் தடை விதித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தத் தடையை விதிப்பதாக அரசு நிர்வாகம் அறிவித்தது.
திடீரென விதிக்கப்பட்ட தடையினால் அமெரிக்க விமான நிலையங்களில் பெரும் குழப்பங்கள் நேர்ந்தன. சட்டப்பூர்வமான விசா வைத்திருந்தவர்கள் விமான நிலையங்களில் தடுக்கப்பட்டனர்; வேறு சிலர் அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தேர்தலுக்கு முன்பே டிரம்ப் தனது இணையதளத்தில், நாட்டில் என்ன நடக்கிறது என்று நம் பிரதிநிதிகள் உறுதி செய்யும் வரைக்கும் நாட்டினுள் முஸ்லிம்கள் நுழைய முடியாது என்று அறிவித்திருந்தார்.
"தனது தேர்தல் பிரசாரத்தில் அறிவித்ததை நிறைவேற்றுவதற்காகவே இந்தத் தடையை விதித்திருக்கிறார். இது முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட நடவடிக்கை," என்று இந்தத் தடைக்கு எதிராக வாதிடப்பட்டது.
கீழமை நீதிமன்றமே, இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி, தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. ஹவாய் பெடரல் நீதிமன்றம் அதிபரின் தடை, அரசியலமைப்பு வழங்கும் சமய பாதுகாப்புக்கு எதிரானது என்று கூறியது. ஆகவே, இவ்வழக்கு 'ஹவாய் எதிர் டிரம்ப்' என்றே பிரபலமாக அறியப்படுகிறது.
நீதிமன்றங்கள் ரத்து செய்வதை தவிர்க்கும் வகையில் சிற்சில மாற்றங்களுடன் இந்த தடை மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் மேற்கூறப்பட்ட முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுடன், சோட் என்னும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாட்டினை சேர்த்தும், வடகொரியா மற்றும் வெனிசூலா நாட்டின் குறிப்பிட்ட அலுவலர்களை உள்ளிட்டும் தடை விதிக்கப்பட்டது.
மூன்றாவதாக விதிக்கப்பட்ட தடையையும் கீழமை நீதிமன்றங்கள் ரத்து செய்தன. ஆனால், அரசு நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து, வழக்கு நீதிமன்ற பரிசீலனையில் இருக்கும்போதே, அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த அனுமதிக்கும்படி கேட்டுள்ளது.
“இவ்வழக்கில் அரசியலமைப்பு சார்ந்த பிரச்னைகள், சட்ட சிக்கல்கள் மற்றும் குடியேற்றத்தை தடுக்க உண்மையிலேயே அதிபருக்குரிய அதிகாரத்தின் எல்லை என அநேக விஷயங்கள் உள்ளன" என்று கார்னல் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் ஸ்டீபன் யேல் லோஹர் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாட் நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை மட்டும் ஏப்ரல் 10-ம் தேதியன்று நீக்கப்பட்டுள்ளது.
"இது சட்டப்படி நடைமுறைக்கு ஒத்து வராத ஆணை. இவ்வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருப்பினும் அது அமெரிக்க தேசம், அதிபர் மற்றும் குடியேறுபவர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டதாகவே அமையும்," என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.