தென் கலிஃபோர்னியாவில் ஒலிக்கும் தேமதுரத் தமிழோசை!

Advertisement
அன்றே சொன்னான் முண்டாசுக்கவி பாரதி, ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்று. 
அவன் கண்ட அந்த கனவை, அவன் ஏற்றிய அந்த நெருப்பை, நாம் நம் குழந்தைகளின் நெஞ்சில் விதைப்பதை விட என்ன பெரிதாய் செய்துவிடமுடியும். தென் கலிஃபோர்னியா தமிழ் சங்கத்தின் அப்படியான நாற்றங்கால் விதைப்பை பற்றிய சிறிய பதிவு. 
10 வருடங்களுக்கு முன், தென் கலிஃபோர்னியா தமிழ் சங்கத்தால் தொடங்கப்பட்ட தமிழ் கல்வி, தற்பொழுது மூன்று ஊர்களில் (Irvine, Brea & Eastvale) கலிபோர்னியா தமிழ் அகாடமியின் வழிகாட்டுதலுடன்  நடத்தப்பட்டு வருகிறது. வெறும் பத்து குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் கல்வி, மூன்று இடங்களில் கிளை பரப்பி, இந்த 2017-18 கல்வியாண்டில் மட்டும், மொத்தம் 254 குழந்தைகளுக்கு தமிழ் கல்வி பயிற்றுவித்துள்ளது.
முத்தாய்ப்பாக, ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற தமிழ் கல்வியின் ஆண்டு நாள் கொண்டாட்டத்தின், ஒரு பகுதியாக 3 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  இது மாபெரும் வரலாற்றின் தொடக்கப்புள்ளி, தென் கலிஃபோர்னியா மாகாணத்தின் தமிழ் வரலாற்றில் ஒரு மைல் கல். 
ஒவ்வொரு ஆண்டும், தமிழ் கல்வியின் சார்பாக பல விழாக்கள் நடத்துவது வழக்கம், அதில் முக்கியமானது ஆண்டு விழா. இவ்விழா, குழந்தைகளுக்கு அவர்களின் திறமையை தமிழ் வழியாக வெளிப்படுத்த ஒரு முக்கிய வாய்ப்பாக அமைகிறது, தமிழ் நெஞ்சங்களுக்கு, ஒரு நம்பிக்கையை குழந்தைகளின் ஆட்டத்தின், பாட்டத்தின் வழியாக வழங்குகிறது. ஒவ்வொரு வருடமும், ஆண்டு விழாவின் தரமும், பிரம்மாண்டமும் பெரியதாகிக்கொண்டே வருகிறது என்பதில் நாம் எல்லோரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.
தோராயமாக 700 தமிழ் உள்ளங்கள் கலந்து கொண்ட இவ்வருட ஆண்டுவிழா, 80க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களாலும், 200க்கும் மேற்பட்ட பெற்றோர்களாலும், 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களாலும் மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்டு, இவ்வருடம் பட்டம் பெற்ற மூன்று மாணவிகளால், தரமாக தொகுத்து வழங்கப்பட்டது. சாஷா லெட்ஃபோர்ட் என்ற வெள்ளைக்கார சிறுமி, தூய தமிழில் அனைவரையும் வரவேற்று ஆரம்பித்த நிகழ்வு, அடுத்த மூன்று மணிநேரங்களுக்கு கொஞ்சமும் தொய்வில்லாமல், வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக்கொண்டிருந்தது.
இவ்வருட நிகழ்ச்சிகள், நம் மொழியை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, கிராமியக்கலைகளை நம் கண் முன்னே கொண்டு வந்தன. குழந்தைகள், இயல், இசை, நாட்டியம் மற்றும் நாடகம் மூலம் நம்மை மகிழ்விக்கவும், சமூக பிரச்சனைகளை சுட்டிக்காட்டவும் செய்தார்கள்.
எத்தனையோ வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகள் படும் துன்பத்தை பற்றி பேசினாலும், நம் குழந்தைகள் மழலையாக மேடையில் சொல்லும்போது, அது தொடும் நம் இதயத்தை.  மொத்தத்தில் ஏப்ரல் 22ம் தேதி மாலைப்பொழுது, தமிழ் கல்வி ஆண்டுவிழா மூலம் மற்றும் ஒரு இனிய மாலை பொழுதாக கழிந்தது. 
ராஜ மௌலி, பல கோடி முதலீட்டில் எடுத்த பாகுபலி படத்தின் சண்டை காட்சிகளை, நம் குழந்தைகளும், தன்னார்வ பெற்றோர்களும் சேர்ந்து நம் கண் முன்னே மேடையில் நடத்தி காட்டிய மாயவித்தையை கண்டு களிக்க ஆயிரம் கோடி கண்கள் வேண்டும், பாகுபலி நாட்டிய நாடகம், சிறப்பு விளைவுகளின் வித்தை என்றால், அடுத்து வந்த மைம் நிகழ்ச்சியோ, பல நாள் பயிற்சின் உச்சம்.  வாய் பேசாமலேயே எப்படி இந்த குழந்தைகளால், நீர் விரையம் எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை சில நிமிடங்களில் நமக்கு கடத்த முடிந்தது? அந்த கருத்தாக்கம், நம் தூக்கத்தை இன்னும் பல இரவுகள் கெடுக்கும்.
மழலைகளின் உயிர் எழுத்து பாட்டு, மழலை மார்க்கெட், பாரம்பரிய விளையாட்டு நடனம் மற்றும் நாடகம், உழவும் உணவும், கரகாட்டம், தெம்மாங்கு பாட்டு, வில்லுப்பாட்டு, தமிழ் மண்ணில் உயிர்த்த வெவ்வேறு வகை நடனங்கள், நாடகம், தொடர் நடனங்களின் தொகுப்பு என நாம் பார்த்தது மேடை நிகழ்ச்சிகள் தான் சினிமா இல்லை என்பதை நம்பத்தான் வேண்டியுள்ளது. அது எப்படி, இரண்டாம் வகுப்பு மாணவ மாணவியரை வைத்து நமது இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு கிராமிய கலைகளான "நூல் பொம்மலாட்டம்" மற்றும் "நிழல் பொம்மலாட்டம்" நடத்த முடியும் அதுவும் மேடையில் அனைவர் கண் முன்னிலையில்.
வருடம் தோறும் நடக்கும்,  கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளுடன், இந்த ஆண்டு புதியதாக குறுக்கெழுத்து போட்டி, மாறுவேட போட்டி மற்றும் கோலப்போட்டிகள் பள்ளி அளவிலும், பேச்சு போட்டி மற்றும் திருக்குறள் போட்டிகள் தென் கலிபோர்னியா அளவிலும் நடத்தப்பட்டது. 
தென் கலிஃபோர்னியா அளவிலான போட்டிகளில் பங்குபெற்ற 103 குழந்தைகளுமே, தன்னளவில் வெற்றியாளர்களே. எவ்வளவோ கவனச்சிதறலுக்கான வாய்ப்பிருந்தும், குழந்தைகள் இப்போட்டியில் உற்சாகத்துடன் பங்குபெற்றதே வெற்றிதான். அதனை சாத்தியமாக்கிய பெற்றோர்கள் மிக பெரிய நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர்கள். 
9, 10 வயது குழந்தைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை சொல்ல முடியுமா!! ஆம் அது சாத்தியம் தான்!!!  "கௌதம் அருண்குமார்" , "அவந்திகா க. சந்திரன்" அதனை சாதித்திருக்கிறார்கள்!!!
மூன்று வயது குழந்தை 11 திருக்குறளை, மிக தெளிவாக சொல்லமுடியும் என்று நம்புகிறீர்களா!!  "ஆன்யா சங்கர்" அதை சாத்தியப்படுத்தி விட்டாள். 
இந்த குழந்தைகள், அமைப்பாளர்களை, தன்னார்வலர்களை, நடுவர்களை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், பிற குழந்தைகளுக்கு ஒரு புதிய இலக்கை அமைத்து தந்திருக்கிறார்கள். மேற்கண்ட சாதனையை படைத்த குழந்தைகள் மூவரில், இருவர் நம் தமிழ் கல்வி மாணவர்கள் எனும்போது எழும் உணர்வு சொல்லில் அடங்காது. இவ்வாண்டு விழாவில், தென் கலிஃபோர்னியா அளவிலான போட்டிகளுக்கு 45 கோப்பைகளை, பள்ளி அளவிலா போட்டிகளுக்கு 137 பதக்கங்களை வென்று, அடுத்த தலைமுறை நமக்கு நம்பிக்கையை தந்திருக்கிறார்கள். 
சாஷா லெட்ஃபோர்ட் என்ற அமெரிக்க சிறுமியின் தூய தமிழில் ஆரம்பித்த பேரலை, இந்திய தேசிய கீதம் தமிழில் ஒலிக்க நிறைவடைந்தது. 
ஆண்டு விழா முடிந்து கிளம்பும் போது, மனதில் நிறைந்தது ஒரே எண்ணம், நம் இனத்தின், மொழியின் தரமான விதைகள் இன்றும் பல இள நெஞ்சங்களில் விதைக்கப்பட்டு விட்டன. அத்தனை விதைகளும் வீரியம் கொண்டு எழும் போது, பாரதியின் கனவான தேமதுர தமிழ் ஓசை, உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும்.
நன்றி,
ஶ்ரீராம் காமேஸ்வரன்
Advertisement
/body>