சமீபத்தில் (ஏப்ரல் 4) 115வது அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதிபரிபாலன குழு தலைவர் சார்லஸ் கிராஸ்லிக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை பிரிவிலிருந்து வந்த கடிதத்தில் ஹெச்-4 விசா வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் ஆகியோர் தொடங்கியுள்ள எஃப்டபிள்யூடி.யுஎஸ் என்ற அமைப்பு, இந்த விதி பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை பாதிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளது.
“ஓர் இயற்பியலாளராக, தொழில்முனைவோராக, அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு என்னுடைய நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்வதன் மூலமாக பங்காற்றுகிறேன்.
என்னை போல பெரும்பாலும் படித்த பெண்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் வைத்திருக்கும் ஹெச்-1 பி விசாவை ரத்து செய்வது, நமது தேசத்தை பாதிப்பதோடு பல்லாயிரக்கணக்கான அமெரிக்க குடும்பங்களில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்” என்று லீவர் ஃபொனடிக்ஸ் உடன் நிறுவனரும், ஹெச்-1 பி விசா வைத்திருப்பவருமான மரிய நாவஸ் மொரினோ கூறியுள்ளதை எஃப்டபிள்யூடி.யுஎஸ் சுட்டிகாட்டியுள்ளது.
“வரும் தலைமுறையினருக்காக, அமெரிக்க ஐக்கிய தேசம் கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும்படி சட்டப்பூர்வமான குடிவரவு வழிகளை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு ஓராண்டு பணியாற்ற அனுமதிக்கும் (எஃப்-1 விசா) ஓபிடி என்னும் விருப்ப செயல்முறை பயிற்சி திட்டத்தையும், வெளிநாட்டு தொழில்முனைவோர், அமெரிக்காவில் தொழில் தொடங்க உதவும் குடியேற்ற வழியான சர்வதேச தொழில்முனைவோர் விதியையும் அரசு தொடர்ந்திட வேண்டுமென்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.