ஸ்டாமி டேனியல்ஸ், வயது வந்தோருக்கான படங்களில் நடித்து வந்த அமெரிக்க நடிகை. இவரது உண்மையான பெயர் ஸ்டெஃபானி கிளிஃபோர்டு.
2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, 2006 - 2007 ஆண்டுகளில் டிரம்ப் அந்நடிகையுடன் வைத்திருந்த பாலியல் தொடர்பு குறித்து பேசாதிருக்க ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர் பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமது வழக்குரைஞர் மைக்கேல் கோஹென் மூலம், தேர்தலுக்கு முன்பு நடிகைக்கு பணம் வழங்கப்பட்டதாக வந்த தகவலை அதிபர் டிரம்ப் மறுத்து வந்தார்.
அதிபர் டிரம்ப்பின் வழக்குரைஞர்கள் குழுவில் தற்போது நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் ரூடி ஜூலியானி இணைந்துள்ளார். அதிபர் டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தில் செலவழிக்கப்பட்ட நிதி குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ரூடி ஜூலியானி பேட்டியளித்தார். அப்பேட்டியில், "டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தின்போது, நிதி எதுவும் தவறாக பயன்படுத்தப்படவில்லை. நடிகை ஸ்டாமி டேனியல்ஸூக்கு வழங்கப்பட்ட பணத்திற்கும், பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்திற்கும் தொடர்பு இல்லை. நடிகைக்கு தனது வழக்குரைஞர் அளித்த தொகையை, அதிபர் டிரம்ப் தமது சொந்தப் பணத்திலிருந்து திருப்பி செலுத்தி விட்டார்," என்று கூறினார்.
நடிகைக்குப் பணம் வழங்கப்பட்டதை அதிபர் டிரம்ப் மறுத்து வந்த நிலையில், அவரது வழக்குரைஞர் இப்படி கூறியிருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அதிபர் டிரம்ப், இப்படிப்பட்டதான ஒப்பந்தங்கள் பிரபலமானவர்களின் வாழ்க்கையில் சகஜம்தான். தவறானதை பேசக்கூடாது என்பதற்காக இவ்வகை ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன என்று டிவிட்டிரில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு, ரஷ்யா உதவி புரிந்தது என்று சர்ச்சை இருந்து வரும் நிலையில், அதிபரின் வழக்குரைஞரான மைக்கேல் கோஹெனின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் அமெரிக்க மத்திய புலனாய்வு துறை, ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய நடிகை ஸ்டாமி டேனியல்ஸின் வழக்குரைஞர் மைக்கேல் அவனெட்டி, "இப்போதுதான் உண்மைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இதுபோன்ற தகவல்களை வைத்து அதிபரை பதவி நீக்கம் செய்ய இயலாது. ஆனால், தொடர்ந்து வெளி வரும் உண்மைகள், டிரம்ப்பை தொடர்ந்து பதவியில் நீடிக்கவிடாமல் செய்து விடும்," என்று கருத்து தெரிவித்துள்ளார்.