ஹெச்-4 விசா - பயமுறுத்தும் வேலையிழப்பு அபாயம்

ஹெச்-4 விசா - அமெரிக்காவில் வேலையிழப்பு அபாயம்

May 11, 2018, 07:59 AM IST

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. அவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கு 'கிரீன் கார்டு' அவசியம். விசா நீட்டிப்பில் இருப்போர், 'கிரீன் கார்டு' வாங்குவதற்கு பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இப்படி பணியாற்றும், காத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களின் வாழ்க்கை துணையாகிய கணவர் அல்லது மனைவிக்கு அமெரிக்கா ஹெச்-4 விசா வழங்குகிறது. 2015-ம் ஆண்டுக்கு முன்பு, சார்ந்திருப்போருக்கான ஹெச்-4 விசா வைத்திருப்போர் வீட்டிலேயே இருக்க வேண்டியதிருந்தது. ஆனால், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், ஹெச்-4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

அல்பே கஜேரா அப்படிப்பட்ட ஒரு தொழில் முனைவர். மென்பொருள் பொறியியல் படித்துள்ள அல்பேவின் கணவர் லினேஷ், கனடாவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவருகிறார். 2012-ம் ஆண்டிலிருந்து லினேஷ், 'கிரீன் கார்டு' பெறுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். அல்பே கஜேரா வீட்டில் வெறுமனே நேரத்தை போக்கிக்கொண்டிருக்க வேண்டிய நிலையில், சுயதொழில் செய்வதற்கு முடிவு செய்தார். அட்லாண்டா பகுதியில் அவர் இரண்டு உணவகங்களை நடத்தி வருகிறார். இன்னும் இரண்டு உணவகங்களை தொடங்குவதற்கும் முடிவு செய்துள்ளார். ஹெச்-4 விசா வைத்திருக்கும் அல்பேயிடம் ஆறு அமெரிக்கர்கள் பணியாற்றுகிறார்கள்.

அட்லாண்டா புறநகர் பகுதியில் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியையாக ஒரு பெண்மணி பணிபுரிகிறார். இவரது கணவர் பப்ளிக் அக்கவுண்ட்டண்ட் என்னும் சான்றிதழ் பெற்ற பொது கணக்காளர். கணவர் 'கிரீன் கார்டு'க்காக காத்திருக்கும் நிலையில், இப்பெண்மணி பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்தார். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அவருக்கு, போதிய கல்வி தகுதியும் அனுபவமும் இருந்தும் விசா பிரச்னை காரணமாக நிறுவனங்கள் வேலை வழங்க தயங்கின. தன்னுடைய கல்லூரி படிப்பு, முனைவர் பட்ட ஆய்வு அனைத்தையும் முடித்த அவருக்கு பள்ளியில் ஆசிரியையாக வேலை கிடைத்தது. ஆசிரியை தட்டுப்பாடு நிலவியதன் காரணமாக, ஹெச்-4 விசா வைத்திருக்கும் இவருக்கு ஆசிரியை பணியிடம் ஒதுக்கப்பட்டது. அப்பள்ளியில் இன்னும் இரண்டு இயற்பியல் ஆசிரியை பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

தென் நியூ ஜெர்ஸி பகுதியில் பணியாற்றும் அலர்ஜிக்கான சிறப்பு மருத்துவர் ஒருவர் ஹெச்-4 விசா வைத்துள்ளார். உணவு ஒவ்வாமை, மூச்சுப்பிரச்னை, ஆஸ்துமா மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு வைத்தியம் செய்யும் இவர் தன் பயிற்சி படிப்பை அமெரிக்காவிலுள்ள பஃபலோ பல்கலைக்கழகத்தில் முடித்தவர். முதலில் ஹெச்-1பி விசா வைத்திருந்த இவர் 2016-ம் ஆண்டில் ஹெச்-4 விசாவுக்கு மாறினார். இவரது கணவர் 'கிரீன்கார்டு'க்கு விண்ணப்பித்துள்ளார். அவரது முறை வருவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் ஆகலாம் என தெரிகிறது. "இந்த நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குறைவு. ஆகவே, எனக்கு விசா ரத்து செய்யப்பட்டால், வாரத்துக்கு 40 முதல் 55 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நான் நூற்றுக்கணக்கான நோயாளிகளை விட்டு விட்டுச் செல்ல வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

அதிபர் டிரம்ப்பின் அரசு எடுத்துள்ள முடிவின்படி, ஹெச்-4 விசா ரத்து செய்யப்படும் நிலை இருப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை இயக்குநர் சமீபத்தில் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார். அப்படி ஒரு முடிவு வருமாயின், ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள், ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அது கிடைப்பது மிகவும் கடினம். ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள் காலியாக உள்ள, தேவையான பணியிடங்களிலேயே பணியமர்த்தப்படுகிறார்கள். தொழில் தொடங்குவதால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குகிறார்கள். ஆகவே, பொருளாதாரத்தில் பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் யாருடைய வாய்ப்பையும் தட்டிப்பறிக்கவில்லை என்று இமிக்ரேஷன் வல்லுநர் அலெக்ஸ் நௌராஷத் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஹெச்-4 விசா - பயமுறுத்தும் வேலையிழப்பு அபாயம் Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை