அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணிபுரிபவர்களின் ஹெச்-4 விசா பெற்ற கணவர் அல்லது மனைவி வேலை செய்ய ஒபாமா அரசு வழங்கிய அனுமதியை ட்ரம்ப் அரசு ரத்து செய்ய உள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. அவர்தம் வாழ்க்கை துணைக்கு ஹெச்-4 விசா வழங்கப்படுகிறது. ஹெச்-4 விசா உள்ளவர்கள், அமெரிக்காவில் வேலை செய்யலாம் அல்லது தொழில் தொடங்கலாம் என்ற அனுமதியை 2015-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமா வழங்கினார்.
தற்போதைய அதிபர் ட்ரம்ப், 'அமெரிக்க பொருள்களை வாங்கு; அமெரிக்கர்களை வேலையில் அமர்த்து' என்ற கொள்கையை அறிவித்துள்ளார். அதற்கேற்ப அமெரிக்க குடியேற்றம் மற்றும் குடிபுகல் துறை விசா நடைமுறைகளை கடுமைப்படுத்தியுள்ளது. மேலும், ஹெச்-4 விசாதாரர்கள் வேலை செய்வதற்கான அனுமதியை ரத்து செய்யும் புதிய விதியை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சியை கைவிட வேண்டி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 130 பேர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
வேலை செய்யும் அனுமதி கொண்ட ஹெச்-4 விசா பெற்றுள்ளவர்களில் 93 விழுக்காட்டினர் இந்தியர். ட்ரம்பின் இந்த விதி நடைமுறைக்கு வந்தால் ஏறத்தாழ 70,000 பேர் பாதிக்கப்படுவர்.
இது குறித்து அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்த தகவலின்படி, ஹெச்-4 விசா ரத்துக்கான விதி உருவாக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது தெரிய வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு துறை அனுமதிக்கு பின்னர், நிர்வாக ரீதியான ஆணை பிறப்பிக்கப்படுவதற்காக நிர்வாகம் மற்றும் நிதிநிலை அறிக்கை அலுவலகத்திற்கு இவ்விதி அனுப்பப்படும் என்றும் தெரிகிறது. ஹெச்-4 விசாதாரர் வேலை செய்யும் உரிமையை பறிக்கும் இவ்விதி வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com