கலிபோர்னியா குடியரசு கட்சியின் கொள்கையில் நாஸியிசத்தை சேர்த்தாக கூகுள் மீது புது புகார் எழுந்துள்ளது.
கடந்த வியாழன் அன்று கலிபோர்னியா குடியரசு கட்சியை பற்றிய தேடுதலின்போது, கூகுள், ஒரு விக்கிப்பீடியா பக்கத்தை காட்டியுள்ளது. அந்த விக்கிப்பீடியா பக்கத்தில் கலிபோர்னியா குடியரசு கட்சியின் கொள்கைகளில் ஹிட்லரின் நாஸிசமும் சேர்க்கப்பட்டிருந்ததை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கூகுள் தேடுதலுக்கு கிடைத்த விடையின் காட்சி சேமிக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் தெரிந்தவுடன், கூகுள் அந்தக் குறிப்பிட்ட பகுதியை நீக்கி விட்டது.
மே 24-ம் தேதி, இதேபோன்றதொரு தகவல் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்பட்டு, பின்பு நீக்கப்பட்டுள்ளது. திரும்பவும் அதேபோன்று தவறான தகவல் சேர்க்கப்பட்டிருந்தபோது, கூகுளின் தேடுதல் பக்கம் அதை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.
கலிபோர்னியாவுக்கான செனட் வேட்பாளரான பேட்ரிக் லிட்டில், அரசில் யூதர்களின் பிரதிநித்துவத்தை குறைத்ததற்காக அடாஃல்ப் ஹிட்லரை புகழ்ந்துள்ளார். இவரை குடியரசு கட்சி புறக்கணித்துள்ளது. ஆனால் பேட்ரிக் தன்னை குடியரசு கட்சியை சார்ந்தவர் என்றே அழைத்துக் கொள்கிறார்.
கலிபோர்னியாவை சேர்ந்த குடியரசு கட்சி தலைவர் கெவின் மெக்ரத்தி, கூகுளின் இந்த தேடுதல் முடிவை 'அவமதிப்பு' என்று டிவீட்டரில் குறிப்பிட்டுள்ளார். கலிபோர்னியா குடியரசு கட்சியின் செயல் இயக்குநர் சிந்தியா பிரையண்ட், கூகுளின் இந்த செயல் அவப்பெயரை சம்பாதிக்கக்கூடியது என்று கூறியுள்ளார்.
மேலும், கூகுள், விக்கிப்பீடியா ஆகிய இரு நிறுவனங்களும் தங்கள் பக்கங்களில் காட்டப்படும் தகவல்கள் குறித்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.