“அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களுள் ஆறுபேருள் ஒருவர் இந்தியர். அவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் தாங்கள் பழகும் சமுதாயத்திற்கும் பல்வேறு பங்களிப்புகளை செய்து வருகிறார்கள்," என்று பொறுப்பாளர் மேரிகே கார்ல்சன் கூறினார்.
இந்தியாவில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள துணை தூதரகங்களில் ஜூன் 6-ம் தேதி 'மாணவர் விசா நாள்' (ஸ்டூடண்ட்ஸ் விசா டே) அனுசரிக்கப்பட்டது. அன்று உயர்படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்கான விசாவுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் பிரத்யேகமாக பரிசீலிக்கப்பட்டன.
மூன்று மாதங்களுக்கு முன்பு, மாணவர் விசா நாள் அறிவிப்பின்போது, "அமெரிக்காவில் உயர்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், விசாவுக்கான நேர்காணலின்போது, கேள்விகளை சரியாக கேட்டு, உண்மையான பதில்களை கூற வேண்டும்," என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஜார்ஜ் ஹெச் ஹோட்ஜ்மேன் கூறினார்.
கல்வி விசாவுக்கான நேர்முக தேர்வு சராசரியாக அரை மணி நேரம் நடைபெறும். நபருக்கு நபர் நேரத்தின் அளவு மாறுபடக்கூடும். உயர்கல்வி பயில அமெரிக்காவை தேர்ந்தெடுத்தற்கான காரணம், படிக்க செல்லும் படிப்பை பற்றிய விவரம், படிப்பதற்கு தேவையான கட்டணத்தை செலுத்துவது பற்றிய விவரங்கள், நேர்முக தேர்வில் பெரும்பாலும் கேட்கப்படும்.
அமெரிக்காவுக்கான கல்வி விசாவை பெறுவதற்கான இரகசியம், கேட்கப்படும் கேள்விகளை சரியாக கவனித்து, அவற்றுக்கு எந்த இரகசியமும் இல்லாமல் உண்மையான பதிலை சொல்வதுதான் என்றும் மாணவர்களுக்கு அமெரிக்க தூதர் அறிவுரை கூறினார்.
உயர்கல்வி அமெரிக்கா -இந்தியா இருநாடுகளுக்குமிடையேயான உறவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு கணக்கின்படி 1,86,000 இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர் என்ற விவரங்களையும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் படிக்க செல்லும் மாணவர்கள், எஜூகேஷன் யுஎஸ்ஏ (Education USA) என்ற துறையை தொடர்பு கொள்ளலாம். 175-க்கும் மேற்பட்ட நாடுகளில் 425-க்கும் மேற்பட்ட மையங்கள் இத்துறைக்கு உள்ளது.
விசா குறித்து யாரும் உத்தரவாதம் தர இயலாது. ஆகவே, மோசடி பேர்வழிகளை நம்பி மாணவர்கள் ஏமாந்து போகக்கூடாது என்று அமெரிக்க தூதரகத்தின் மோசடி தடுப்பு மேலாளர் எலிசபெத் லாரன்ஸ் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு.. https://travel.state.gov/content/travel/en/us-visas/study/student-visa.html