அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு உயர்திறன் பணியாளர்களுக்கு ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் புதிதாக அவ்விசா கோரி விண்ணப்பிப்போரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விசா வழங்கப்படும்.
அடுத்த 2019 நிதியாண்டில் ஹெச்-1பி விசா கோரி விண்ணப்பித்துள்ளோரில் ஒரு தொகுப்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. விண்ணப்பதாரரின் சட்ட ஆலோசகருக்கு விண்ணப்ப மனுவும் அதனுடன் அசல் அனுமதி சீட்டும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஹெச்-1பி விசா வழங்கப்படுவது எப்படி?
முதலில் பணிவழங்கும் நிறுவனம் தன் பணியாளருக்கு ஹெச்-1 விசா கோரும் மனுவினை உரிய ஆதாரங்களுடன் அமெரிக்க குடியேற்றம் மற்றும் குடிபுகல் துறையில் சமர்ப்பிக்கும் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் (லாட்டரி) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்ப மனுக்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்கள், கட்டணத்திற்காக செலுத்தப்பட்ட காசோலைகளுடன் விண்ணப்பித்த பணிவழங்கும் நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
H1B Visa Approvals Flow Chart
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மனுக்களில், போதிய ஆதாரங்கள் உள்ளவற்றுக்கு நேரடியாக அனுமதி வழங்கப்படும். அனுமதி வழங்கப்பட்டதும், மேற்கூறியதுபோல் மனுவுடன் அசல் அனுமதி சீட்டு விண்ணப்பித்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மனுக்களில் போதிய ஆதாரம் இல்லாத மனுதாரர்களிடம் மேலும் ஆதாரங்கள் கேட்கப்படும். அவற்றுள் குறித்த நேரத்துக்குள் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிப்போருக்கான விசா மட்டும் அனுமதிக்கப்படும்.
விண்ணப்பித்தல், குலுக்கலில் தேர்வாகுதல், விண்ணப்ப கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படல், பணிவழங்கும் நிறுவனம் சமர்ப்பித்த ஆதாரங்களை குடிபுகல் துறை ஏற்றுக்கொள்ளுதல், விசா அனுமதி வழங்குதல் என்ற இப்பாதை எல்லோருக்கும் அப்படியே நடந்து விடுவதில்லை. குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் மனுக்களில் ஏறக்குறைய 20 சதவீதம் மனுக்களுக்கு மேலும் ஆதாரம் கேட்கப்படுகிறது.
பணி வழங்கும் நிறுவனம் செய்யும் தொழில், அந்நிறுவனத்தின் வரி விவரம், வருவாய், பணியாளரின் முந்தைய பணிவிவரம் மற்றும் பணியாளரில் கல்வி விவரங்கள் குறித்து மேலதிகமாக கேட்கப்படும் ஆதாரங்கள் திருப்திகரமானவையாக இருந்தால் மட்டுமே ஹெச்-1பி விசா வழங்கப்படும்.
ஹெச்-1பி விசா, வெளிநாட்டவருக்கு குறிப்பாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களில் கனவு என்றே சொல்லலாம்.