அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கவே, ஜி7 மாநாட்டில் பாதியிலேயே முடித்துக் கொண்டார் ட்ரம்ப்.
இதனால், ட்ரம்ப்புக்கும் சர்வதேச தலைவர்களுக்கும் இடையில் நிலவி வந்த உறவுச் சிக்கல் மேலும் குழப்பமான நிலையை அடைந்துள்ளது. ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்றதில் இருந்து பல அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை எடுத்து வருகிறார்.
கடந்த மாதம் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் செய்தது அமெரிக்க அரசு. இந்த வரி அதிகரிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கனடா பிரதமர் ட்ரூட், ட்ரம்ப்க்கு போன் மூலம் வலியுறுத்தினார்.
அப்போது, `நாஃப்டா ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு நீங்கள் சம்மதித்தால் இந்த புதிய வரி விதிப்பு ரத்து செய்யப்படும்' என்று ட்ரம்ப் பதில் கூறினார். இதையடுத்து, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஜி7 மாநாடு நடந்தது. இதில் ட்ரம்ப் மற்றும் ட்ரூட் கலந்து கொண்டனர். இதில், அமெரிக்காவுக்கு எதிரான சில கருத்துகளை ட்ரூட் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், `ட்ரூட் அமெரிக்கா குறித்து தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார். ஆனால் கனடா, அமெரிக்காவின் விவசாயிகள், நிறுவனங்கள் மீது விதிக்கும் அதீத வரி விதிப்பு பற்றி எதையும் வெளிப்படுத்தவில்லை. இதனால், அமெரிக்க அதிகாரிகளுக்கு ஜி7 மாநாட்டில் சொல்லப்படும் விஷயங்களுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளேன்' என்று கடுகடுத்துள்ளார்.