அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டின் அதிபராக பதவியேற்றதற்குப் பிறகும் அதற்கு முன்னரும் 'ஃபேக் மீடியா' என்றொரு குற்றச்சாட்டை அனைத்து ஊடக நிறுவனங்களின் மீதும் வைத்து வருகிறார்.
இந்த வாரம் வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சிங்கப்பூரில் சந்தித்து இரு நாட்டுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர். இருவரின் சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து சுமூக முடிவு எட்டப்பட்டது.
அமெரிக்க ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக முக்கிய செய்தியாக இந்த சந்திப்பு தான் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சந்திப்பை சரியான முறையில் அமெரிக்காவின் போலியான பல ஊடக நிறுவனங்கள் ரிப்போர்ட் செய்யவில்லை என்று ட்ரம்ப் நொந்துகொண்டுள்ளார்.
'ஃபேக் மீடியா' குறித்து ட்ரம்ப், 'வட கொரியாவுடன் நடந்த சந்திப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் 'ஃபேக் மீடியா' ரிப்போர்ட் செய்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஊடக நிறுவனங்களான 'என்.பி.சி' மற்றும் 'சி.என்.என்' ஆகியவை இதில் முன்னிலையில் நிற்கின்றன.
500 நாட்களுக்கு முன்னர் இதைப் போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்து விடுமாறும் இல்லையென்றால் ஒரு பெரும் போரே வெடிக்கும் என்றும் இவர்கள் கெஞ்சி இருப்பர். நம் நாட்டின் மிகப் பெரிய எதிரி இதைப் போன்ற 'ஃபேக் மீடியா'-க்கள் தான்' என்று கடுகடுத்துள்ளார்.