பிரிட்டனை சேர்ந்த பொறியியல் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் 4,600 பணியாளர்களை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் செலவினை குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விமானபோக்குவரத்து, பாதுகாப்பு துறை மற்றும் ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களுக்கான எஞ்ஜின்கள் மற்றும் முக்கிய பாகங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
வரும் 2020-ம் ஆண்டில், நிறுவனத்தின் ஆண்டு செலவில் 400 மில்லியன் பவுண்ட் குறைப்பதற்காக ஆட்குறைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்குள் 4,600 பணியிடங்கள் குறைக்கப்படும் என தெரிகிறது. பிரிட்டனில் உள்ள பெரும்பான்மையான பணியாளர்களே பாதிப்புக்குள்ளாவர்கள் என கணிப்புகள் கூறுகின்றன.
“பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது எளிதான விஷயமல்ல. ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த வணிக நிறுவனத்தில் இது தவிர்க்கப்பட முடியாதது,” என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வாரன் ஈஸ்ட் கூறியுள்ளார்.
"பணிநீக்கம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டால் நிறுவனத்தின் சுமூகமான செயல்பாடு பாதிக்கப்படும். அத்தியாவசியமான அனுபவமுள்ள பணியாளர்களை இழக்க நேரிடும். இந்த வேலையிழப்பு பிரிட்டனில் பணியாளர்கள் மத்தியில் நிச்சயம் பொருளாதார தாக்கத்தை உண்டாக்கும்," என்று பிரிட்டனின் 'யுனைட்' தொழிற்சங்க பேரவையை சேர்ந்த ஸ்டீவ் டர்னர் தெரிவித்துள்ளார்.
இந்த பணிநீக்க அறிவிப்பினை தொடர்ந்து லண்டனில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் உயர்வை பெற்றன.