அமெரிக்காவில் ஊபர் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் முத்தமிட்டுக் கொண்டனர். அதனால் வெகுண்ட ஓட்டுநர் அவர்களை பாதி வழியில் இறக்கி விட்டுள்ளார்.
ஊபர் நிறுவனம் அப்பெண்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப கொடுத்துள்ளது. ஓட்டுநர் மீது விசாரணை நடந்து வருகிறது.
புரூக்ளின் நகரிலுள்ள பார் ஒன்றில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, மன்ஹாட்டனுக்கு அப்பெண்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
அலெக்ஸ் ஐயோவின் (வயது 26), எம்மா பிக்ல் (வயது 24) என்ற இரு பெண்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக 'டேட்டிங்' செய்து கொண்டிருக்கின்றனர். சம்பவ தினத்தன்று, அவர்கள் ஊபர் வாகனம் ஒன்றில் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். பயணத்தின்போது பேசிக்கொண்டு வந்த இருவரும், குனிந்து முத்தமிட்டுக் கொண்டுள்ளனர்.
இது நடந்து சிறிது நேரத்தில், மன்ஹாட்டன் சாலையில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர், இறங்கி பின் பக்கம் வந்து, கதவை திறந்து இருவரையும் இறக்கிவிட்டுள்ளார். 'என்ன பிரச்னை?' என்று கேட்டபோது, 'நீங்கள் செய்தது சட்டவிரோதமானது' என்று கூறியுள்ளார்.
'முத்தமிடுவது சட்ட விரோதமல்ல' என்று கூறியதற்கு, 'காரில் நீங்கள் முத்தமிட்டுக்கொள்ளக்கூடாது. அது சட்ட விரோதம்' என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஊபர் விதிகளின்படி, வாகனத்தில் பயணிக்கும்போது மற்றவரை தொடவோ, உல்லாசமாக இருக்கவோ முயற்சிக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும், ஓட்டுநர் அல்லது உடன் பயணிகளோடு பாலியல் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது.
தாங்கள் செய்தது விதிமீறல் அல்ல என்று இரு பெண்களும் கூறுகின்றனர். ஓட்டுநர் அகமது போட்டரி, "முத்தமிட்டது மாத்திரமல்ல, சத்தமாக வீடியோவை ஓட விட்டது, இருக்கையில் கால்களை தூக்கி வைத்தது என்று மோசமாகவே நடந்து கொண்டனர். இது என்னுடைய சொந்த கார். இதில் அவர்கள் அப்படி நடந்து கொண்டது தவறு," என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு முதல் அகமது போட்டரி, வாடகை கார் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார். நியூயார்க் நகர வாடகை கார் மற்றும் லிமோஸின் ஆணையம், தற்போது அவரது உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து விசாரணை நடத்தி வருகிறது.