அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்படுவது ஹெச்-1பி விசாவாகும். இந்த விசா வழங்குவதற்கு ஆதாரங்கள் கேட்பது குறித்த வழக்கு கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியேறுதல் மற்றும் குடிபுகல் அலுவலகத்தின் மீது, அமெரிக்க குடிபுகல் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு வழக்கினை தொடுத்துள்ளது.
ஹெச் - 1பி விசாவுக்கு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்பட்டம் பெற்றவர்களுக்கான 20,000 மாஸ்டர்ஸ் கேப் என்ற சிறப்பு ஒதுக்கீடு உட்பட ஆண்டின் உச்சவரம்பு எண்ணிக்கை 85,000. ஆனால், ஹெச்-1பி விசாவுக்கு இந்த ஆண்டு மட்டும் 1,90,000 விண்ணப்பங்கள் வந்ததுள்ளன. 2018 - 19 ஆண்டுக்கான விசா வழங்கப்படுபவர்கள், அக்டோபர் 1-ம் தேதி முதல் பணியாற்ற முடியும்.
குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தகுதி பெற்ற சிறப்புப் பணிக்கான தொழில்முறை பணியாளர்களுக்கு ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான ஒப்புகை மற்றும் ஆர்எஃப்இ என்னும் ஆதாரங்கள் கேட்பு நடைமுறை ஆரம்பமாகியுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் காலகட்டத்தில் விசா வழங்கும் குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறையிடமிருந்து விண்ணப்பித்தோர் தகவலை எதிர்பார்க்கலாம்.
ஆர்எஃப்இ என்னும் ஆதாரங்கள் கேட்பு நடவடிக்கையே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தேவையற்ற விதத்தில் ஆதாரங்களை காரணம் காட்டி விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக ஒரு கருத்து பரவலாக உள்ளது.
அமெரிக்க குடியேற்றம் மற்றும் குடிபுகல் துறை ஆதாரம் கேட்டால் ஹெச்-1 பி பணியாளரை பணியிலமர்த்தும் நிறுவனம் மற்றும் அவர்களது வழக்குரைஞர்கள் பணியாளரின் தகுதி மற்றும் விசாவுக்கான தேவை குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதாரங்கள் கேட்பது மற்றும் நிராகரிப்பது ஆகியவை அதிகரித்துள்ள நிலையில், ஏஐஎல்ஏ என்ற அமெரிக்க குடிபுகல் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு, ஊதியம் மற்றும் பணியின் சிறப்புத் தன்மையை நிர்ணயித்தல் குறித்த இரண்டு விளக்கம் கோரும் விண்ணப்பங்களை அமெரிக்க குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறைக்கு அனுப்பியது.
அதற்கு விளக்கம் கிடைக்காததால், கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.