டிரம்ப்புக்கு எதிர்ப்பு - பிரமிளா ஜெயபால் உட்பட 500 பெண்கள் கைது

பிரமிளா ஜெயபால் உட்பட 500 பெண்கள் அமெரிக்காவில் கைது

Jul 1, 2018, 08:34 AM IST

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரான அமெரிக்க இந்தியர் பிரமிளா ஜெயபாலும் அவருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

Pramila Jayapal

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடிபுகல் கொள்கைகளை பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க மெக்ஸிகோ எல்லையை தாண்டி வந்த பலர் குடும்பங்குடும்பமாக கைது செய்யப்பட்டனர். குடும்பத்திலுள்ள குழந்தைகளை அரசு அதிகாரிகள் தனியே பிரித்தனர்.

பெற்றோர் மற்றும் காப்பாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் தனியாக அடைக்கப்பட்டனர். பெற்றோர் தங்களை கைவிட்டதாக பிள்ளைகள் நினைத்தனர். எதுவும் செய்ய இயலாத நிலையில் பிள்ளைகளை பிரிந்த ஏக்கத்தில் பெற்றோர் தவித்தனர்.

பிள்ளைகளும் பெற்றோரும் பிரித்து வைக்கப்பட்டிருந்த முகாமுக்கு முதன்முதலாக சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால்தான். அப்போது, பலர் தங்கள் சோககதையினை பிரமிளாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மெக்ஸிகோவின் ஹோண்டுராஸில் நடைபெற்று வரும் வன்முறைக்கு பயந்து, தங்களையும் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர், அமெரிக்க எல்லையில் குவிந்துள்ளனர். அமெரிக்காவின் சர்வதேச பாலம் தங்களுக்குத் திறக்கப்படுவதற்காக அவர்கள் காத்து கிடக்கின்றனர். குறைந்த கட்டணம் கொண்ட பேருந்திலோ, நடந்தோ அல்லது எந்த வாகனத்திலாவது உதவி கேட்டு மக்கள் வந்து கொண்டுள்ளனர்.

தன் இரண்டு வயது மகன், டைலன் ஃபேப்ரிஸியோவுடன் இரண்டரை மாதங்கள் நடந்தும் பல்வேறு விதங்களில் பயணித்தும் ஹோண்டுராஸிலிருந்து மெக்ஸிகோவின் நுவோ லேரோடாவை அடைந்து, அமெரிக்காவுக்குள் செல்வதற்கு காத்திருப்பதாக ரூபன் எஸ்பனோ கூறியுள்ளார். 25 வயதான ரூபன், 'தந்தையும் நானே; தாயும் நானே' என்னும் ஒற்றைப் பெற்றோர்.

Trump

அல்ஃபிரடோ ஹெர்னாண்டஸ், தன் இரண்டு வயது மகன் அக்ஸல் அல்ஃபிரடோவுடன் காத்திருக்கிறார். "நான் ஆரம்ப கல்வி மட்டும்தான் பயின்றுள்ளேன். என் மகனை எப்படியாவது படிக்க வைக்கவேண்டுமென்று விரும்பியே வந்துள்ளேன். அவனை டாக்டராக்கவேண்டுமென்று நினைக்கிறேன்," என்கிறார் அவர். ஹோண்டுராஸின் வன்முறைக்குத் தப்பி, தன் மகனை எப்படியாவது வாழ வைக்கவேண்டுமென்ற வாஞ்சையோடு அமெரிக்க எல்லையில் காத்து கிடக்கிறார் அல்ஃபிரடோ.

இப்படி ஆயிரக்கணக்கானோர் காத்திருக்க, குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கண்டனம் எழுந்தது. வாஷிங்டனில் கேப்பிடோல் ஹில்லில் 500 பெண்களோடு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பிரமிளா ஜெயபால், "குடும்பங்களை பிரிப்பது; அடைக்கலம் தேடிவருவோரை கைது செய்வது; பிள்ளைகளை கூண்டுகளில் அடைப்பது ஆகிய நிர்வாக முடிவுகளை எதிர்த்து என்னோடு குரல் கொடுக்க அமெரிக்கா முழுவதிலுமிருந்து 500 பெண்கள் வந்துள்ளனர். அவர்களோடு கைதாவதை பெருமையாக கருதுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

2016-ம் ஆண்டு வாஷிங்டனிலிருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வான பிரமிளா ஜெயபால் (வயது 52), மீண்டும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தலில் நிற்க இருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ள முதல் இந்திய வம்சாவளி பெண் இவர்தாம் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading டிரம்ப்புக்கு எதிர்ப்பு - பிரமிளா ஜெயபால் உட்பட 500 பெண்கள் கைது Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை