அமெரிக்காவில் ஹெச்-4 விசா (H4 visa) உள்ளவர்களுக்கு பணிபுரியும் அனுமதியை ரத்து செய்வது குறித்து ஜூன் மாதத்தில் வெளியிடுவதாக கூறிய சட்ட முன் வரைவினை (NPRM) டிரம்ப் நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை.
அமெரிக்காவில் பணிபுரியும் திறன்மிகு பணியாளர்களுக்கு ஹெச்-1பி விசா (H-1B visa) வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை துணைகளுக்கு ஹெச்-4 விசா கொடுக்கப்படுகிறது.
முந்தைய அதிபர் ஒபாமா, 2015-ஆம் ஆண்டில், ஹெச்-4 விசா உள்ளவர்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி வழங்கினார். தற்போதைய அதிபர் டிரம்ப்பின் அரசு இந்த உரிமையை ரத்து செய்ய உள்ளதாக கூறி வருகிறது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை (DHS), அதற்கான ஆணை அமெரிக்க மேலாண்மை மற்றும் நிதி ஒதுக்கீட்டின் அனுமதிக்காக பிப்ரவரி மாதம் அனுப்பப்படும் என்று உள்நாட்டு நீதிமன்றம் (Federal court) ஒன்றில் தெரிவித்திருந்தது.
பிப்ரவரி மாதம் கடந்த நிலையில் மார்ச் மாதம், சட்ட முன் வரைவு ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று இன்னொரு நீதிமன்ற விசாரணையின்போது கூறியிருந்தது. ஜூன் மாதம் இறுதி வரை சட்ட முன் வரைவு வெளியிடப்படவில்லை. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர், “தற்போது தெரிவிக்க எந்த விவரமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
ஹெச்-4 விசா பெற்று பணிபுரிந்து வருபவர்களுள் பெரும்பான்மையினர் இந்திய பெண்கள் தாம். அவர்களது பணியுரிமையை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறிய இரண்டு காலக்கெடுவையும் டிரம்ப் நிர்வாகம் தவற விட்டுள்ளது. இது குறித்து தெளிவான முடிவு வெளியாகும் வரையில் ஹெச்-4 விசாதாரர்களுக்கு நிம்மதி கிடைக்காது.