ஹெச்1பி விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரியும் கணவர்களுடன் உடன் செல்லும் மனைவிகள் அந்நாட்டில் பணிப்புரிய தடை விதித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வெளிநாட்டவர்களுக்கும், பெண்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
முன்பு ஆட்சியில் இருந்த அதிபர் ஒபாமா, கடந்த 2015ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் ஹெச் 1பி விசா பெற்று நிதி நிறுவனங்களில் பணி செய்பவர்கள், பொறியாளர்கள், பட்டம்பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் வாழ்வதற்கு வசதியை ஏற்படுத்தவும், புதிய சட்ட விதியினை திருத்தி அமைத்தார். பின்னர், ஹெச்-4 என்ற புதிய வகையான விசாவில் தங்கள் மனைவியை தன்னுடன் அழைத்து செல்ல வருடத்திற்கு 55 ஆயிரம் செலுத்தி க்ரீன் கார்டு வசதியை பெற வழிவகை செய்தார் முன்னாள் அதிபர் ஒபாமா.
இதன் பிறகு, டிரம்ப்பின் அரசாங்கம், ஹெச் 1பி விசா பெற்று அரசின் அனுமதியுடன் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர் தங்களுடன் மனைவியை எச் 4 விசா அழைத்து வர அனுமதி அளித்துள்ளது. மேலும், அங்கேயே மனைவிகள் பணிபுரியவும் பிரச்னை ஏதும் இல்லாமல் இருந்தது.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து சென்று அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரியலாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில், டிரம்ப்பின் "பை அமெரிக்கன், ஹயர் அமெரிக்கன்" என்ற கொள்கையின் அடிப்படையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் அனுமதியின்றியும், சட்டத்திற்கு புறம்பாகவும் அமெரிக்காவில் குடியேறுபவர்களை தடுக்கும் வகையில் இது அமையும் என ட்ரம்பின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "இது உலக நாடுகளுக்கு ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால், தங்கள் நாட்டின் தொழிலாளர்களின் நலன், வேலை பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், உலகிலேயே முதல் நாடாக அமெரிக்கா திகழவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது" என கூறப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளிநாட்டவரக்ளுக்கும், பெண்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.