மும்பை தாக்குதல் தீவிரவாத கட்சி கணக்குகள் முடக்கம் - ஃபேஸ்புக் நடவடிக்கை

மும்பை தாக்குதல் தீவிரவாத கட்சி கணக்குகள் முடக்கம்

Jul 16, 2018, 20:25 PM IST

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் கட்சி வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் முகநூல் கணக்குகளை ஃபேஸ்புக் முடக்கியுள்ளது.

Hafiz Saeed

ஜூலை 25-ஆம் தேதி நடைபெற இருக்கும் பாகிஸ்தான் பொது தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹபீஸ் சயீத், ஜமாத் உத் தாவா (Jamaat-ud-Dawa)என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்புக்கு மில்லி முஸ்லிம் லீக் (Milli Muslim League - MML)என்ற அரசியல் கட்சி உள்ளது. இந்தக் கட்சியை பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் (ECP)அங்கீகரிக்கவில்லை. 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குக் காரணமான, லஸ்கர் இ தொய்பா (LeT) தீவிரவாத அமைப்புடன் இதற்கு உள்ள தொடர்பை கருத்தில் கொண்டு அமெரிக்கா, மில்லி முஸ்லிம் லீக்கை அயல்நாட்டு தீவிரவாத இயக்கங்களில் பட்டியலில் வைத்துள்ளது.

தனது கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்காததை தொடர்ந்து. இன்னொரு சிறிய கட்சியான அல்லா ஓ அக்பர் தெஹ்ரீக் (AAT) சார்பில் தனது வேட்பாளர்கள் 200 பேர் நிற்பார்கள் என்று ஹபீஸ் சயீத் அறிவித்திருந்தார்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் போலி பக்கங்களை கண்டறியவும் அவற்றை தடை செய்யவும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக சமீபத்தில் ஃபேஸ்புக் அதிகாரிகள், பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டனர். பாகிஸ்தான், இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் நடைபெற இருக்கும் தேர்தல்களுக்கு நேர்மையான முறையில் தமது நிறுவனம் உதவுவதையும், இதை பயன்படுத்தி யாரும் தேர்தல்களில் தலையிடுவதை தடுப்பதையும் உறுதிப்படுத்துவதே தமது தலையாய நோக்கம் என்று ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து மில்லி முஸ்லிம் லீக், வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் அதிக எண்ணிக்கையிலான முகநூல் கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

மில்லி முஸ்லிம் லீக்கின் செய்தி தொடர்பாளர் தபிஷ் குவாயும், “தேர்தலுக்கு ஆங்காங்கே பல்வேறு விதங்களில் வேலைகள் நடந்து வருகின்றன. எல்லா கட்சிகளும் தங்கள் பிரசாரத்துக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. வாக்காளர்களை கவருவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கட்சிகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் மில்லி முஸ்லிம் லீக்கிற்கு மட்டும் அந்த வாய்ப்பு காரணமின்றி மறுக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பேசும் கருத்து சுதந்தரத்திற்கு எதிராக அந்நிறுவனமே செயல்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, போலி கணக்குகளை கண்டறிந்து அகற்ற ஃபேஸ்புக் செயற்கை நுண்ணறிவினை வெற்றிகரமாக பயன்படுத்தி வருவதாக மார்க் ஸக்கர்பெர்க் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மும்பை தாக்குதல் தீவிரவாத கட்சி கணக்குகள் முடக்கம் - ஃபேஸ்புக் நடவடிக்கை Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை