ஆண்ட்ராய்டு (Android) பயன்பாட்டில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறி கூகுள் நிறுவனத்திற்கு 4.34 பில்லியன் யூரோ (ஏறக்குறைய 34,500 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலக அளவிலான இணைய பயன்பாட்டின் பாதிக்கு மேற்பட்ட பகுதியை ஸ்மார்ட் ஃபோன்களே ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோருக்கு உரிமம் வழங்குவதற்கு கூகுள் தேடுபொறி மற்றும் பிரௌசர் (குரோம் - Chrome) செயலிகளை தங்கள் தயாரிப்புகளில் நிறுவ வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.
கூகுள் தேடுபொறி செயலி நிறுவப்பட்டதாகவே தங்கள் தயாரிப்புகளை வெளியிட சில பெரிய நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தியுள்ளது. கூகுள் செயலிகளை ஏற்கனவே நிறுவி, விற்கப்படும் ஸ்மார்ட் ஃபோன்களில் ஆண்ட்ராய்டுக்கான மாற்றான இயங்குதளத்தை பயன்படுத்த கூகுள் அனுமதிப்பதில்லை. என்ற மூன்று காரணங்களால் கூகுளுக்கு அபராதம் விதிப்பதாக ஆணையர் மார்க்கிரேத் வெஸ்டேகர் கூறியுள்ளார்.
ஆண்ட்ராய்டு விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை கூகுள் 2011-ம் ஆண்டிலிருந்து மீறி வருவதாகவும், அமேசான் (ஃபயர் இயங்குதளம் - Fire OS) போன்ற தங்கள் தொழில் போட்டியாளர்கள் இயங்குவதற்கு போதிய வாய்ப்புகளை கூகுள் தர மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள ஆண்ட்ராய்டிலிருந்து செல்லும் தகவல்களை கூகுள் தேடுபொறி பயன்படுத்துமாறு இணைக்கப்பட்டிருப்பதால், வேறு எந்த நிறுவனமும் போட்டியில் நிற்க முடிவதில்லை. தரமான போட்டியை அனுமதிப்பதன் மூலம் பயனர்களுக்கும் நன்மை விளையும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஆணையத்தின் முடிவை தொடர்ந்து தாங்கள் பரிசீலனை கோர இருப்பதாக கூகுளின் ஐரோப்பிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “ஆண்ட்ராய்டு ஓர் சங்கிலியை உருவாக்கி இருப்பதாகவும், கட்டணமின்றி வழங்கப்படும் அந்த இயங்குதளம் பல்வேறு கூகுள் பயன்பாட்டு செயலிகளுக்கு உதவக்கூடியது என்றும், பல்வேறு நாடுகளின் வெவ்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் ஃபோன்களில் இது பயன்படக்கூடியதாக இருப்பதால், இதை தடைசெய்வது ஆண்ட்ராய்டு சங்கிலியை பாதிக்கும் என்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கூகுள் ஷாப்பிங் செயலி, தேடுதல் முடிவுகளை தருவது தொடர்பான சர்ச்சையின் அடிப்படையில் ஐரோப்பிய ஆணையம் 2.4 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.