அமெரிக்க நிறுவனமாக வால்மார்ட் (Walmart), இந்தியாவின் முன்னணி மின்னணு (e-commerce)வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் (Flipkart) 77 விழுக்காடு பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு (ஏறத்தாழ 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய்) வாங்கியுள்ளது. கடந்த மே மாதம் வால்மார்ட் இதை அறிவித்தது.
வால்மார்ட் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் கால் பதிக்க முயற்சித்து வந்தது. தற்போது இன்னொரு அமெரிக்க நிறுவனமான அமேசானுக்கு போட்டியாக ஃபிளிப்கார்ட்டை வால்மார்ட் கைப்பற்றியுள்ளது.
இந்த இணைப்பு, பார்த்தி-இன்டஸ் டவர்ஸ் (14.6 பில்லியன்), எஸ்ஸார் ஆயில்-ரோஸ்நெஃப்ட் (12.9 பில்லியன்) ஆகிய நிறுவனங்களின் இணைப்புகளை விட மதிப்பு அதிகமானதாகும். இந்த இணைப்பு மூலம் நேரடி சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட், மின்னணு வர்த்தகத்தில் நுழைகிறது. இந்தியாவின் மின்னணு சந்தையில் 90 சதவீதத்தை இந்நிறுவனம் ஆக்கிரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட், அமேசான் இரண்டு பெருநிறுவனங்களும் இந்தியாவின் சிறு நிறுவனங்களை முற்றிலுமாக ஓரங்கட்டி விடும்.
அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டம் (US Foreign Corrupt Practices Act) , அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கிறது. முன்பு மெக்ஸிகோவில் (Mexico) உரிமங்களை பெறுவதற்காக வால்மார்ட் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது இந்தியாவில் அப்படி குற்றச்சாட்டு எழுந்துவிடாத வண்ணம், அமெரிக்க வெனிநாட்டு ஊழல் சட்ட எல்லைக்குட்பட்டு செயல்பட வால்மார்ட் விரும்புகிறது. அதற்காக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, சட்ட ஆலோசகர் மற்றும் நல்லிணக்க அதிகாரி ஆகிய பொறுப்புகளில் வெளிநாட்டினரை நியமிக்க வால்மார்ட் முடிவு செய்துள்ளது.
மேலும் சில முக்கிய அலுவலர்களை குருகிராம் (குர்கான்) மற்றும் பிரிட்டனிலிருந்து ஃபிளிப்கார்ட்டின் தலைமையகமான பெங்களூருவுக்கு இடமாற்றம் செய்யவும் வால்மார்ட் நடவடிக்கை எடுத்து வருகிறது.