ஜப்பானின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு இரண்டு லட்சம் எஞ்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர்.
2030-ம் ஆண்டில் இது எட்டு லட்சமாக அதிகரிக்கும். பெங்களூரு தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஜப்பானின் நாகசாஹி-இக்கி நகர தொகுதி உறுப்பினர் கெய்சுகே யாமமோட்டா இத்தகவலை தெரிவித்தார்.
இந்தியாவில் பொறியியல் படித்தோருக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. பலர் பணியிழக்கக்கூடிய சூழ்நிலையிலும் உள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகள், வெனிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்கள் நாட்டுக்கு வந்து பணியாற்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் உள்ள ஜப்பான் இந்திய பொறியியலாளர்களை வரவேற்பது நல்ல செய்தியாகும்.
ஜப்பானின் நாகசாஹி பகுதியிலுள்ள நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம், கப்பல் மற்றும் தயாரிப்பு தொழில்துறையில் இந்திய எஞ்ஜினியர்களை பணியமர்த்த ஆயத்தமாக உள்ளன. அப்பகுதியிலுள்ள 2,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 93 நிறுவனங்கள் தொழில்நுட்ப பணியாளர் காலி பணியிடங்களில் இந்திய பொறியியலாளர்களை அமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளன. அரசு இந்தத் துறைகளில் இந்திய பொறியியலாளர்களை அமர்த்துவதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறது. விரைவில் இந்திய நிறுவனங்களை ஜப்பானின் நாகசாஹி பகுதிக்கு அழைப்பதற்கான பணிகள் இறுதி செய்யப்படும் என்று கெய்சுகே யாமமோட்டா தெரிவித்தார்.
2016-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE), ஆண்டுதோறும் 75,000 இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளது. 2015-16 கல்வியாண்டில் 16,47,155 இடங்களில் 52,2 சதவீதமான 8,60,357 இடங்களும், 2016-17 கல்வியாண்டில் 15,71,220 இடங்களில் 50.1 சதவீதமான 7,87,127 இடங்களுமே நிரப்பப்பட்டன. பொறியியல் படிப்புக்கு வரவேற்பு குறைந்துள்ளது.
இந்தியா ஜப்பானிடையே தொழில்நுட்ப மாணவர் பயிற்சிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதனடிப்படையில் மூன்று லட்சம் இளைஞர்களை மூன்று முதல் ஐந்து ஆண்டு தொழிற்பயிற்சிக்காக ஜப்பானுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருகிறது. இந்திய தொழில்நுட்ப பணியாளர்களுக்கான பயிற்சி செலவினை ஜப்பான் ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளது. இவர்களுள் 50,000 பேருக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.