ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இந்தியாவை சேர்ந்த மாலின் ரதோட் என்றமாணவர் கொலையாகியுள்ளார். டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம்பெண்ணை சந்திக்கச் சென்றபோது இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அஹமதாபாத்தை சேர்ந்தவர் மாலின் ரதோட் (வயது 25). அக்கவுண்டசியில் மேற்படிப்பு படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவர், பொருட்களை கொண்டு இறக்கும் டெலிவரி ஓட்டுநராக பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். எல்ஸ்டர்ன்விக் என்ற இடத்தில் ரதோட் வசித்து வந்தார்.
டேட்டிங் செயலி மூலம் 19 வயது பெண் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக கடந்த திங்கட்கிழமை இரவு மெல்போர்ன் நகரின் வட மேற்குப் பகுதியான சன்பரி ராஸ் கோர்ட் என்ற இடத்திற்கு ரதோட் சென்றுள்ளார். அந்த வீட்டிலிருந்து இரவு 9 மணியளவில் ஆஸ்திரேலிய அவசர உதவி மையத்திற்கு அழைப்பு வந்துள்ளது. விக்டோரியா காவல்துறை தகவலின்படி, மாலின் ரதோட் அங்கு பயங்கர காயங்களுடன் கிடந்துள்ளார். சிகிச்சையில் இருந்த அவர் செவ்வாய் இரவு இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மாலின் ரதோட் பெற்றோருக்கு ஒரே மகன். ரதோட்டின் மரணத்தோடு தொடர்பு இருக்கக்கூடும் என்று கைது செய்யப்பட்ட 19 வயது இளம்பெண்ணை காவலில் வைப்பதற்கு மெல்போர்ன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.