பாகிஸ்தான் பொது தேர்தல்... வெற்றி பெற்ற முதல் இந்து வேட்பாளர்

பாகிஸ்தானில் வெற்றி பெற்ற முதல் இந்து வேட்பாளர்

Jul 29, 2018, 19:29 PM IST

ஜூலை 25-ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெற்ற பொது தேர்தலில் மகேஷ் குமார் மலானி என்பவர் தெற்கு சிந்து மாகாணத்தின் தார்பர்கர் - 2 என்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

Mahesh Kumar Malani

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (Pakistan Peoples Party) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அவர், நாட்டின் பொது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல் இந்து வேட்பாளர் ஆவார்.

பர்வேஸ் முஷாரப் அதிபராக இருந்தபோது பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம் இஸ்லாமியர் அல்லாதோரும் வாக்குரிமை பெற்றனர். 2002-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் மாகாண தேர்தலில் வாக்களிப்பதற்கும் போட்டியிடுவதற்கும் இஸ்லாமியர் அல்லாதோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இஸ்லாமியர் அல்லாதோருக்கு செனட், பாராளுமன்றம் மற்றும் மாகாண அவைகளில் தனி உறுப்பினர் முறையும் உள்ளது. பாராளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கு 10 தனி உறுப்பினர்கள் உள்ளனர். கட்சிகளின் பலத்தை பொறுத்து இந்த உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் பெறுவர்.

பெண்களும் இஸ்லாமியர் அல்லாதோரும் 272 நாடாளுமன்ற தொகுதிகள் எவற்றிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று அல்லது நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள ஏதேனும் கட்சி மூலம் நியமிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகலாம்.

நாடாளுமன்றத்தின் 222 தொகுதியான தார்பர்கர் - 2ல் போட்டியிட்ட மகேஷ் குமார் மலானி தன்னை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். பாகிஸ்தான் இந்து ராஜஸ்தானி புஷ்கர்ண பிராமண வகுப்பை சார்ந்த இவர், 1,06,630 வாக்குகளை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பெரும் ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அர்பாப் ஸகாயுல்லா 87,251 வாக்குகள் பெற்றுள்ளார்.

Pakistan

மலானி, 2003 - 2008 ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூலம் நியமிக்கப்பட்டிருந்தார். 2013-ம் ஆண்டு சிந்து மாகாண சபைக்கு தார்பர்கர் - 3 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மாகாண சபைக்கு வெற்றி பெற்ற முதல் இந்து வேட்பாளரும் இவர்தான். தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.

சிந்து மாகாண அவையின் உணவுக்கான நிலைக்குழுவின் தலைவராகவும், பல்வேறு நிலைக்குழுக்களின் உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம், சிந்து மாகாணத்தில் பெண்களுக்கான தனி தொகுதியிலிருந்து கிருஷ்ணகுமாரி என்பவர் செனட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்தவர்தாம். கிருஷ்ணகுமாரி, பாகிஸ்தான் செனட்டுக்கு தேர்வான முதல் இந்து பெண் வேட்பாளர் ஆவார்.

பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாதோர் வாக்குரிமை பெற்ற பின்னர் 16 ஆண்டுகள் கழித்து இந்து வேட்பாளர் ஒருவர் நாடாளுமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாகிஸ்தான் பொது தேர்தல்... வெற்றி பெற்ற முதல் இந்து வேட்பாளர் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை