பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக, இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் விவாகரத்து பெறவும், விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவரை இழந்த விதவைப்பெண்கள் மறுமணம் செய்துக் கொள்வதற்கு பாகிஸ்தானில் சட்டம் இல்லை.
இந்நிலையில், இதற்கு அனுமதி அளிக்கும் வகையில் இந்து திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் நந்த்குமார் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண சட்டமன்றத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
இதில், திருமணம் வயதை அடையாத சிறுமிகளுக்கு திருமணம் செய்யவும் தடை விதிக்க கோரிய சட்டத்திருத்தம் செய்யப்பட்டு கடந்த வாரம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, இனி இந்து மதத்தை சேர்ந்த ஆண்கள் அல்லது பெண்கள் விவாகரத்து கோரலாம் என்றும், விவாகரத்து ஆனவர்கள் அல்லது கணவனை அல்லது மனைவியை இழந்த இருபாலரும் மறுமணம் செய்துக் கொள்ளலாம் என்று இந்த சட்டம் சொல்கிறது.
இதனால், சிந்து மாகாண மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.