அமெரிக்காவுக்குள் செல்ல டிரெய்லருக்குள் ஒளிந்திருந்த 78 பேர்!

by SAM ASIR, Aug 15, 2018, 15:41 PM IST
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுபவர்களை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் வேட்டையில் சட்ட விரோதமாக அமெரிக்காவில் வசிப்போர் மற்றும் நுழைய முயற்சித்தோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்க குடிபுகல் மற்றும் சுங்க துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளனர். ஹூஸ்டன் பகுதியில் மட்டும் 45 பேர் சட்ட விரோத குடியேற்றம் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.
பிடிபட்டவர்களுள் இந்தியா, ஹோண்டூராஸ், எல் சால்வெடார், மெக்ஸிகோ, கௌதமாலா, அர்ஜெண்டினா, கியூபா, நைஜீரியா, சிலி மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்தவர்கள் இருப்பதாக அமெரிக்க குடிபுகல் மற்றும் சுங்க துறை தெரிவித்துள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடும் அயல்நாட்டவர்களை குறி வைத்து தேடிய இத்துறை, அவர்களுள் பெரும்பான்மையினர் குடிபுகல் செயல்முறை முடிவடையும்முன்னரே தப்பி ஓடியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
 
கடந்த வாரம், டெக்சாஸ் பகுதி சுங்கசாவடியில் பூட்டிய நிலையில் இருந்த குளிரூட்டப்பட்ட சரக்கு வாகனம் ஒன்றினுள் மனிதர்கள் ஒளிந்திருந்ததை சுங்க துறை கண்டுபிடித்துள்ளது. இந்தியா, மெக்ஸிகோ, கௌதமாலா, ஹோண்டூராஸ், எல் சால்வெடார், பிரேசில், ஈக்வடார் மற்றும் டொமினியன் குடியரசு நாடுகளை சேர்ந்த 78 பேர் டிரெய்லரினுள் இருந்துள்ளனர்.
 
"டிரெய்லரில் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற அனைவரும் நல்ல உடல்நிலையில் உள்ளனர். ஆனால், இதுபோன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட உதவும் நிறுவனங்கள்மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சரக்குகளைபோல கணக்கு காண்பித்து மனிதர்களை கொண்டு செல்ல முயற்சிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும்," என்று லாரெடோ பகுதி பொறுப்பு தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜேசன் ஓவன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் தென் எல்லை வழியாக சட்ட விரோதமாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இரண்டு குடிபுகல் தடுப்பு மையங்களில் முன்பு பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையினர் பஞ்சாபை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading அமெரிக்காவுக்குள் செல்ல டிரெய்லருக்குள் ஒளிந்திருந்த 78 பேர்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை