உலகில் அதிகமான மக்கள் தொகை கொண்ட சீனாவில் இரண்டுக்கும் குறைவாக அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் தம்பதியருக்கு மகப்பேறு வரி விதிக்க வேண்டும் என்று ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மக்கள் தொகை உயரும் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் விதிமுறை வைத்திருந்தது. பல காலம் இந்த விதிமுறைதான் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், நாட்டில் முதியோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதையும், வேலை செய்யும் திறன் கொண்டோர் எண்ணிக்கை குறைந்து வருவதையும் அரசாங்கம் கவனித்தது.
பணி திறன் குறைந்ததால் பொருளாதார பாதிப்பும், பாலின விகிதம் குறைவதால் சமுதாய பாதிப்பும் உருவாகும் என்று தெரிய வந்தது. ஆகவே, 2016ம் ஆண்டு முதல் இரண்டு குழந்தைகள் இருக்கலாம் என்று விதி தளர்த்தப்பட்டது. விதி தளர்த்தப்பட்டபோதிலும் எதிர்பார்த்த அளவு குழந்தை பிறப்பு உயரவில்லை.
நாட்டில் குழந்தை பிறப்பு அதிகமாகி, மக்கள் தொகை உயருவதற்கு சீனாவின் லியூ ஸிபியா, ஸாங் யீஎன்ற இரு கல்வியாளர்கள் ஒரு வித்தியாசமான ஆலோசனையை கூறியுள்ளனர். நாற்பது வயதுக்கு குறைவானவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இல்லையென்றால் அவர்கள் மற்றவர்களின் குழந்தைபேற்றுக்கு உதவும் வண்ணம் ஆண்டுதோறும் நிதி வழங்கவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
நாஞ்ஜிங் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர்களான இவர்கள் கூறிய ஆலோசனை நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.