ஆறு மாத மகளின் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருந்தது, குழந்தையை சரியாக பராமரிக்காதது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி கடந்த வாரம் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த பிரகாஷ் சேட்டு, மாலா பன்னீர்செல்வம் தம்பதியர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆறு மாதமான இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அதில் பெண் குழந்தையான ஹிமிஷாவுக்கு இடக்கையில் வீக்கம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் ஃப்ளோரிடா பிராவர்ட் கவுண்டியில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். குழந்தையின் சிகிச்சை குறித்து அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாகவும், சிகிச்சை அளிக்கவிடாமல் குழந்தையை தூக்கிச் செல்ல முயற்சித்ததாகவும் மருத்துவமனையிலிருந்து அமெரிக்க குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு புகார் செய்யப்பட்டது.
ஸ்கெலிட்டல் சர்வே என்னும் எக்ஸ் ரே சோதனையை செய்ய விடாமல் தடுத்ததாகவும், மருத்துவ சோதனைகளின் கட்டணம் குறித்து சேட்டு - மாலா தம்பதியர் கேள்வி எழுப்பியதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்கள் குழந்தைகளை ஃபோர்ட் லாடர்டேலில் சிறை வைக்கப்பட்டனர். குழந்தைகளை குழந்தைகள் பாதுகாப்பு துறை கவனிப்பில் எடுத்துக்கொண்டது.
முதலில் அவர்களை பிணையில் விடுவிப்பதற்கு இரண்டு லட்சம் டாலர் தேவை என கூறப்பட்டது. பின்பு 30,000 டாலர் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
"அவர்களால் பரிசோதனைக்கான தொகையை செலுத்த முடியாத காரணத்தினால் மட்டுமே, பரிசோதனையை குறித்து அதிகம் விசாரித்துள்ளனர். எல்லா சிகிச்சையும் மருத்துவ காப்பீட்டினுள் வராது. தம்பதியர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளனர்," என்று அவர்களது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு சட்ட போராட்டத்திற்காக பண உதவி செய்யும்படி நண்பர்கள் ஆன்லைன் மூலம் பணம் திரட்டி வருகின்றனர்.
"பிஞ்சு குழந்தைகளை பெற்ற தாய் தகப்பனை விட்டு பிரிப்பது பாவம். அவர்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். நான் அவர்களை பராமரித்துக் கொள்வேன்," என்று மாலாவின் தாயாரும் குழந்தைகளின் பாட்டியுமான மல்லிகா கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் குழந்தை பாதுகாப்பு குறித்த சட்டங்கள் கடுமையாக உள்ளன. குழந்தைகளை குறித்து அலட்சியம் காட்டுவதாக பல பெற்றோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.