அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் எஞ்ஜினியர்களை சீனாவுக்காக வேலை பார்க்க வைக்க முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜி சாக்குவான் என்ற சீன இளைஞர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பொறியல் படிப்பதற்காக 2013ம் ஆண்டு மாணவருக்கான விசாவில் சிகாகோ வந்தவர் ஜி சாக்குவான். இவருக்கு தற்போது 27 வயதாகிறது. அமெரிக்க பாதுகாப்பு துறையில் பணியாற்றிய சிலர் உள்ளிட்ட எட்டு பேர் பற்றிய விவரங்களை சீனாவின் உளவுப்பிரிவுக்கு வழங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீனாவின் உள்நாட்டு பாதுகாப்பு துறையின், குடிமக்கள் நுண்ணறிவு சேகரிப்பு மற்றும் வெளிநாடு சார்ந்த நுண்ணறிவு இவற்றை கையாளும் பிரிவின் உயர் அதிகாரியின் வழிகாட்டலின்பேரில் ஜி சாக்குவான் செயல்பட்டு வந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி சாக்குவானால் அணுகப்பட்ட எட்டு பேருமே தைவான் மற்றும் சீன நாடுகளில் பிறந்து, இயல்பான வகையில் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போது பணியாற்றி வருகிற இந்த எட்டு பேரையும் சீனாவுக்காக வேவு பார்க்கும் நோக்கில் ஜி சாக்குவான் தொடர்பு கொண்டுள்ளார்.
ஜி சாக்குவானுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகாரிகளை அணுகி, சீனாவிலிருந்து பணம் அனுப்புவது சிரமம் என்பதால், அவர்களுக்காகக சில ஆவணங்களை வாங்கி தரும்படி தன்னைக் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.