ஐநா சபையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட சுஷ்மா சுவராஜ் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்கிருந்து வெளியேறியதால் பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நியூயார்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஐநா பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே, சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துகொண்டார்.
சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுஷ்மா சுவராஜ், உரையாற்றிய பின்னர், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்கிருந்து வெளியேறினார்.
இதனால், அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி, “கூட்டத்தின் பாதியிலேயே அவர் (சுஷ்மா) வெளியேறியதற்கு காரணம் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி அவர் இந்த கூட்டத்தில் பேசினார்.
பிராந்திய ஒத்துழைப்பை பற்றி பேசுவதற்காக இங்கு அனைவரும் அமர்ந்திருக்கும்போது பேச்சுவார்த்தைக்கு தடை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பிராந்திய ஒத்துழைப்பு எப்படி சாத்தியமாகும்?.
சார்க் அமைப்பின் செயல்திட்டங்கள் மூலம் கிடைத்த வெற்றிகளை பற்றி பேச நான் தயங்கவில்லை. ஆனால், பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் நாடுகளின் செழிப்புக்கு ஒரே ஒரு தடை உள்ளது. ஒரே ஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது” என்று கூறினார்.