ஹைதியில் வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு தலைநகர் போர்ட் ஆ பிரின்ஸ் மையமாக கொண்டு வடமேற்கே 11 மைல்கள் தொலைவில் சுமார் 7.2மைல்கள் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகியுள்ளது.
அந்நாட்டின் பிரதமர் ஜீன் ஹென்றி அவசரகால உதவிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டோர்க்கு போர்க்கால அடிப்படையில் உதவிகளை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நாட்டின் குடியரசு தலைவர் ஜோவெனில் மொய்ஸ் கூறுகையில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.
ரிக்டர் அளவுகோலில் பதிவாகிய 5.9 என்ற இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை. மேலும் பாதிக்கப்பட்டோர் வடமேற்கு பகுதியில் தான் அதிகளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை அங்குள்ள மருத்துவமனையில் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஹைத்தி தீவில் மட்டும் சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.