ஹெச்-1பி விசா என்னும் வேலைவாய்ப்பு மற்றும் சிறப்பு பணிகளுக்கு உரிய விசாவுக்கான வரையறையில் மாற்றம் செய்வதற்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் இந்த மாற்றங்கள் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் இந்திய அமெரிக்கர்களால் நடத்தப்படும் சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்த நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கருத்தியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற வெளிநாட்டு பணியாளர்களை சிறப்பு பணிகளில் அமர்த்துவதற்கு அனுமதிக்கும் குடிபெயர்வு இல்லாத விசா ஹெச்-1பி விசா ஆகும். இது இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
ஹெச்-1பி விசா பெற்றவர்கள் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்க அனுமதி உண்டு. இந்த விசா கால நீட்டிப்பு செய்யப்படலாம். பொதுவாக மொத்தத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிப்பு செய்ய இயலாது.
ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 65,000 ஹெச்-1பி விசா வழங்கப்படலாம் என்று அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதித்துள்ளது. அமெரிக்காவில் பட்டமேற்படிப்பு அல்லது அதற்கு மேலான படிப்பு முடித்தோர் சார்பாக சமர்ப்பிக்கப்படும் முதல் 20,000 மனுக்களுக்கு இந்த உச்சவரம்பிலிருந்து விலக்கு உண்டு.
ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பிற்கு மேலாக ஹெச்-1பி விசா தேவைப்படுவதை கண்காணித்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாவுக்கான பதிவை மின்னணு நடைமுறைக்கு மாற்றுவதற்கு ஆலோசித்துள்ளது.
ஹெச்-1பி விசாவுக்கான விண்ணப்பங்களை திறமையாக கையாளவும், தேர்வுக்கான லாட்டரி முறையை செம்மையாக நடத்தவும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை (US Citizenship and Immigration Services - USCIS)க்கு இந்த நடைமுறை உதவும் என்று கூறப்படுகிறது.
ஹெச்-1பி விசாவானது அமெரிக்க பணியாளர்களுக்கு பதிலாக வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்த நிறுவனங்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கும் அதிபர் டிரம்பின் அரசு, ஹெச்-1பி விசா கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை 2019 ஜனவரி மாதம் முதல் புதிய முன்மொழிவை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (Department of Homeland Security - DHS) புதன்கிழமை கூறியுள்ளது.
மிகச்சிறந்த திறமைவாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களை பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் வண்ணம் ஹெச்-1பி விசாவுக்கான வரையறை திருத்தப்படுவதாகவும் ஹெச்-1பி விசாதாரர்களுக்கு நிறுவனங்கள் பொருத்தமான ஊதியம் வழங்குவதற்கான கூடுதல் ஏற்பாடுகளும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும்.
இந்த மாற்றம் பணியாளருக்கும் நிறுவனத்துக்கும் இடையேயான உறவையும் அமெரிக்க பணியாளர்களையும் ஊதியத்தையும் பாதுகாக்கும் என்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை கருத்து தெரிவித்துள்ளது.
ஹெச்-1பி விசாதாரர்களின் கணவர் அல்லது மனைவியாகிய வாழ்க்கைத்துணை, 21 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகிய குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை ஹெச்-4 விசா வழங்கி வருகிறது. ஹெச்-4 விசாதாரர்களுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் உரிமையை முந்தைய ஒபாமா அரசு வழங்கியது.
2015ம் ஆண்டு மே மாதம் முதல் 2017 டிசம்பர் 25ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 90,946 முதல்முறை விண்ணப்பங்கள், 35,219 புதுப்பித்தல்கள் மற்றும் தொலைந்த விசாக்களுக்கான 688 பதில் விசாக்கள் உள்பட 1,26,853 ஹெச்-4 விசாதாரர்களுக்கு பணியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பணியாளர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் வண்ணம் ஹெச்-4 விசாதாரர்களுக்கான பணியுரிமையை ரத்து செய்வதற்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விரும்புவதாக நம்பப்படுகிறது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை வெளிப்படையாகவும் நீதிமன்றங்களிலும் தெரிவித்து வருகிறபடி, ஹெச்-4 விசாதாரர்களுள் பெரும்பாலானோர் இந்திய பெண்களாவர். புதிய விசா கொள்கை நடைமுறைக்கு வருமானால் 70,000க்கும் அதிகமான இந்திய பெண்களின் பணியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே மூன்று முறை நடைபெற்ற முயற்சி தாமதித்து வரும் வேளையில் இப்போது நடைமுறைக்கு வந்துவிடுமானால், வேலைவாய்ப்பு பறிபோகும் அவலம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.