பாலியல் தொல்லை குறித்த குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கடுமையாக கையாளுகிறது என்று அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அலுவலக சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை உருவாக்கிய ஆன்டி ரூபின் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக 2014ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை விட்டு விலகினார். அவர் விலகிய பின்னர் நிறுவனம் அவருக்கு 90 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது.
மேலும் அவரது அடுத்த திட்டம் ஒன்றில் கூகுள் நிறுவனம் பெரும் முதலீடு செய்துள்ளது என்று 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான வேறு இரண்டு பேரை அந்நிறுவனம் பாதுகாப்பதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து தமது நிறுவன ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள சுந்தர் பிச்சை, அச்செய்தி தெளிவில்லாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு, கடந்த இரு ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக 48 பேரை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பதாகவும் அவர்களுள் 13 பேர் முதுநிலை மேலாளர்கள் மற்றும் அதற்கு மேலான பதவிகளில் இருந்தவர்கள் என்றும் அந்தச் சுற்றறிக்கை கூறுகிறது.
பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் யாருக்கும் பணி விலகலுக்கான பணபலன்கள் தரப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சையுடன் கூகுள் நிறுவனத்தின் மக்கள் செயல்பாட்டு பிரிவு துணை தலைவர் யெய்லீன் நாட்டனும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக 'வாஷிங்டன் போஸ்ட்' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.