இந்தோனேசியாவில் பயணிகள் விமானம் ஒன்று கடலில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இந்திய விமானி உள்பட 189 பயணிகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவின் ஜகர்தா நகரின் சோய்கர்னோ ஹட்டா விமான நிலையத்தில் இருந்து லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று காலை 6.20 மணிக்கு சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்குக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், பயணிகள், விமானிகள், விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 189 பயணம் செய்தனர். இந்த விமானத்தை, இந்தியாவை சேர்ந்த விமானியான பாவ்யே சுனேஜா இயக்கியுள்ளார்.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட பத்து நிமிடங்களில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிப்பானது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விமானம் எங்கு சென்றுக் கொண்டிருக்கிறது என்று தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து, விமானம் மேற்கு ஜாவா தீவு கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து, பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பயணிகள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இதனால், விமானப்பயணி உள்பட 189 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும், கடலில் மூழ்கியுள்ள சடலங்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த விமான விபத்துக்கு காரணம் விமானத்தில் ஏற்பட்ட பழுதா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், கறுப்பு பெட்டி கிடைத்தால் அதன் மூலம், விபத்துக்கான காரணம் குறித்து தெரிந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.