அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பற்றி பத்திரிக்கையாளர் மிச்சேல் வுல்ஃப் எழுதியுள்ள சர்ச்சைக்குரிய புத்தகம் டிரம்ப்பின் மிரட்டலையும் மீறி வெளியிடப்பட்ட புத்தகத்தை அமோக விற்பனை ஆகியுள்ளது.
அமெரிக்க பத்திரிக்கையாளர் மிச்சேல் வுல்ப், ட்ரம்ப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘நெருப்பும் சீற்றமும் – ட்ரம்பின் வெள்ளை மாளிகைக்குள்’ [FIRE AND FURY - inside the trump white house] என்ற அந்த புத்தகத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார்.
பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்றுள்ள இந்த புத்தகம் அமெரிக்காவில் வெள்ளியன்று வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை வெளியிடாமல் தடுக்கும் பொருட்டு சட்ட நடவடிக்கை எடுக்க ட்ரம்ப் உத்தரவிட்டு இருந்தார். இதற்கான நடவடிக்கைகளில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வந்தனர். எனினும் இது வெற்றி பெறவில்லை.
திட்டமிட்டபடி, அந்த புத்தகம் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பல்வேறு புத்தக கடைகளில் இந்த புத்தகம் அதிக அளவு விற்பனையானது. வாஷிங்டனில் பல கடைகளிலும் நள்ளிரவு வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகத்தை வாங்கிச் சென்றனர்.