இந்திய அரசு தங்களிடம் கோரிய தரவுகளின் எண்ணிக்கை (Data request) குறித்த அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 16) அன்று ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கோரிய தரவுகளின் எண்ணிக்கையை காட்டிலும் ஒப்புநோக்க அதிகமான தரவுகளை இந்த ஆண்டின் முதல் பாதியிலே இந்திய அரசு கோரியுள்ளது அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. 2016ம் ஆண்டு 13,613 கோரிக்கைகளையும், 2017ம் ஆண்டு 22,024 கோரிக்கைகளையும் இந்திய அரசு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளது. 2018ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான முதற்பாதியில் மட்டும் 16,580 தரவுகளை இந்திய அரசு கோரியுள்ளது.
அரசு கோரிய தரவுகள் எவ்வகையிலானது என்பதை அந்நிறுவனம் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும், அரசின் கோரிக்கைகளில் 53 விழுக்காட்டிற்கான தரவுகளை இதுவரை அளித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
அமெரிக்கா, மியான்மர் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பற்றிய பொய்யான தகவல்கள், தேர்தல்களில் தலையீடு, வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டக்கூடிய பதிவுகள் குறித்து ஃபேஸ்புக் பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், "அரசு வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையையும் சட்டப்பூர்வமாக ஏற்றவையா என்று பரிசீலிக்கப்படுகிறது. தெளிவற்றையாக இருக்கும் பட்சத்தில் அவை பற்றி இன்னும் அதிக விவரங்கள் கோரப்படுகிறது அல்லது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது," என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
பயனர் கணக்குகளை பாதுகாத்து வைப்பது குறித்த கோரிக்கைகள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்காக தாமதிக்கின்றன. இது போன்ற கோரிக்கைகள் வரும்போது, உடனடியாக அப்பயனர் கணக்கு குறித்த ஸ்னாப் ஷாட் தற்காலிகமாக சேகரிக்கப்படுகிறது. ஆனாலும், உரிய சட்டப்பூர்வமான மற்றும் அலுவல்ரீதியான கோரிக்கை வருமளவும் அத்தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை என்றும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.