லண்டனில் தன்பாலின நண்பருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொந்த மனைவியை கொலை செய்த வழக்கில் கணவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வடக்கு பகுதியை சேர்ந்த ஜெசிகா படேல் (34) மற்றும் கணவர் மிதேஷ் படேல் (37) இருவரும் சேர்ந்து அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 14-ம் தேதி ஜெசிகா படேல் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணையில் திடுக்கிடும் சில தகவல்கள் வெளியாகின.
ஜெசிகாவின் கணவர் மிதேஷ் தன்பாலின சேர்க்கையாளர். டாக்டர் மிதேஷ் படேலுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தனது மனைவியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதற்காக இணையதளங்களில் பல விஷயங்களை மிதேஷ் தொடர்ந்து தேடி வந்துள்ளார். குறிப்பாக என் மனைவியை கொலை செய்ய வேண்டும், அதிக இன்சுலின், என் மனைவியை கொல்லும் வழி, என்னுடன் வேறு யாரையாவது சேர்த்து கொள்ள வேண்டுமா? பிரிட்டனில் கூலிப் படையை ஏற்பாடு செய்யலாமா என பல கேள்விகளுக்கு இணைய தளத்தில் பதில் தேடியிருக்கிறார்.
மேலும், ஜெசிகா படேல் மீதுள்ள 20 லட்சம் பவுண்ட் இன்சூரன்ஸ் பாலிசி பணத்தை பெற்று கொண்டு தனது தன்பாலின நண்பரோடு ஆஸ்திரேலியாவிற்கு குடியேறுவதாக திட்டமிட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
ஆகவே, இந்த வழக்கில் ஜெசிகாவின் கணவர் குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும்.