மேகாலயா மாநிலத்தில் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்கத்தினுள் 13 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேகாலயா மாநிலம் கனிம வளங்கள் செறிந்தது. அங்குள்ள சுரங்கங்களால் நீர் மாசு படுகிறதென்று சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சுமத்தினர். ஆகவே, மேகலாயாவில் நிலக்கரி சுரங்கங்கள் செயல்படுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 2014ம் ஆண்டு தடைவிதித்தது.
ஆனாலும், எலி வளை என்று பொருள்படும் 'ரேட் ஹோல்' (Rat hole mines) சுரங்கங்கள் மூலம் சட்டத்திற்கு விரோதமாக சுரங்க வேலை நடந்து வருகிறது. இந்தக் குறுகிய சுரங்கங்களில் வழியாக கனிமங்களை கொண்டு வருவது ஆபத்தான செயல். இதன் காரணமாக பல விபத்துகள் நடந்துள்ளன.
மேகாலயாவின் கிழக்கு ஜைண்டினா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கம் ஒன்றினுள் வியாழன் அதிகாலையில் தண்ணீர் புகுந்தது. அருகிலுள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இந்த ஆபத்து நேர்ந்துள்ளது. 320 அடி ஆழம் கொண்ட அந்த சுரங்கத்தினுள் 13 தொழிலாளர்கள் உள்ளனர். சுரங்கத்தினுள் 70 அடி ஆழத்திற்கு நீர் நிறைந்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் படையினர் ஆகியோர் காவல்துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தினுள் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. படகுகள் மற்றும் பளுதூக்கும் கிரேன்கள் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக சுரங்கத்தை நடத்தி வந்தவர் தலைமறைவாகிவிட்டார்.
2012ம் ஆண்டிலிருந்து இதுவரை இதுபோன்ற எலிவளை சுரங்கங்களினுள் சிக்கி 15 சுரங்க தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் யாருடைய சடலமும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.