இளநீருக்கு பேர்போன ஊருக்கு இந்த நிலையா? கண்ணீருடன் குமுறும் பொள்ளாச்சிவாசிகள்

Big shame for us- Pollatchi peple worry

பொள்ளாச்சி என்றாலே தென்னைகளும், இளநீரும் நினைவுக்கு வந்த நிலை மாறி, பாலியல் சம்பவத்தால் தங்களது ஊரின் பெயர் கெட்டுவிட்டதே என்று, ஊர்வாசிகள் வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, இயற்கை எழில் கொஞ்சும் சிறு நகரம். திரும்பிய பக்கம் எல்லாம் நீண்டு வளர்ந்து நிற்கும் தென்னைகளின் அழகு, பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும். இதனால் தான், படப்பிடிப்புக்கு திரைப்பட துறையினர் விரும்பும் ஊராக பொள்ளாச்சி இன்னமும் இருந்து வருகிறது.

இதமான வெப்பநிலை நிலவும் பொள்ளாச்சிக்கு அருகிலேயே ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், ஆழியாறு, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. கூப்பிடும் தூரத்தில் கேரள எல்லை தொடங்குகிறது.

அமைதியான இந்த பொள்ளாச்சி, கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. பாலியல் வக்கிர எண்ணம் கொண்ட சில மிருகங்கள் இங்கு நிகழ்த்திய கொடூரச்செயல், பொள்ளாச்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டது.

பெண்களை முகநூலில் தொடர்பு கொண்டு, அவர்களை நயவஞ்சகமாக ஏமாற்றில் தங்கள் விரித்த வலையில் விழச்செய்துள்ளது இந்த கும்பல். சில பெரிய புள்ளிகளின் ஆசியோடு இக்கும்பல், நூற்றுக்கணக்கான பெண்களை தொடர்ந்து சீரழிந்து வந்துள்ளதோடு, அதை வீடியோவாக எடுத்து, அச்சுறுத்தி வந்துள்ளது.

இந்த விவகாரம் ஊடகங்கள் வாயிலாக வெளியே கசிந்து, தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இது, தங்களுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக, கொங்கு தமிழில் பேசி குமுறுகின்றனர் பொள்ளாச்சி மக்கள். இனி இந்த ஊரில் பெண் எடுக்கக்கூட பலரும் தயங்கும் நிலை வந்துவிடுமோ என்று, அவர்கள் வேதனையோடு புலம்புகின்றனர்.

இத்தகைய அவமானத்தை பொள்ளாச்சிக்கு ஏற்படுத்தி தந்த கயவர்களை, அவர்கள் எத்தகைய செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் சரி, பாகுபாடு பார்க்காமல் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்; அது, இத்தகைய செயலுக்கு துணை போகும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதே, பொள்ளாச்சி மக்களின் வேண்டுகோளாகும்.

You'r reading இளநீருக்கு பேர்போன ஊருக்கு இந்த நிலையா? கண்ணீருடன் குமுறும் பொள்ளாச்சிவாசிகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாஜக நிர்பந்தத்தால் சிபிஐ விசாரணை! பொள்ளாச்சி விவகாரத்தால் மிரண்டு போன கொங்கு கேபினட்!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்