பாலேஸ்வரம் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீது விசாரணை நடத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பாலேஸ்வரம் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீது விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணரும்படி தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது : காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பாலேஸ்வரத்தில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்தில், விதிமீறல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் உள்ளதாக தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில், வேனில் ஒரு மூதாட்டியும், ஒரு முதியவரும் இருந்ததுடன், காய்கறி மூட்டைகளிடையே ஒரு சடலமும் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த வேனை சாலவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இது குறித்து அரசு அதிகாரிகள் குழு இந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ததில், பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2017 நவம்பர் மாதத்துடன் அரசு அனுமதி முடிந்து விட்டதாகத் தெரிகிறது. இந்த கருணை இல்லத்தில் இறப்பவர்களின் சடலத்தை சுவற்றில் அமைத்துள்ள சிறு, சிறு பெட்டிகள் போன்ற பிணவறைகளில் வைத்து சிமெண்ட் பூசி அடக்கம் செய்யப்படும் வினோத நடைமுறை பின்பற்றப்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இக்கருணை இல்லத்தில் 350 பேர் வரை தங்கவைத்திருப்பதாக தெரிகிறது. இங்கு இறப்பவர்கள் குறித்த விவரங்களும் காவல்துறைக்கோ, சமூகநலத்துறைக்கோ தெரிவிப்பதில்லை எனவும் கூறுகின்றனர். இங்கு மர்மமான முறையில் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதால், சடலத்தில் மிஞ்சும் எலும்புகளை விற்பனைக்காக கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. இறக்கும் தருவாயில் உள்ள முதியோர்களுக்கான கருணை இல்லம் என்ற பெயரில் செயல்பட்டாலும், இங்கு 4, 5 வயது குழந்தைகள் முதல் அனைத்துமட்ட வயதினரும் தங்கவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தவர்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

எனவே, தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொணர வேண்டும். விசாரணை அறிக்கை அடிப்படையில் கருணை இல்ல நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், இத்தனை முறைகேடுகளுடன் கருணை இல்லம் செயல்பட அனுமதித்த சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறுவதுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You'r reading பாலேஸ்வரம் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீது விசாரணை நடத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'பேரும் பரிசும் வேண்டாம், சமமான சம்பளம் தாருங்கள்'- டிராவிட் கோரிக்கைக்குப் பச்சைக்கொடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்