சென்னையில் வெங்காயம் விலை ரூ.200ஐ எட்டியது.. பல்லாரி கிலோ ரூ.180..

Onion prices rise up to Rs.200 in koyambedu market

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200, பெரிய வெங்காயம்(பல்லாரி) ரூ.180 வரை உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. நாடாளுமன்றத்தில் வெங்காயம் விலை உயர்வு பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை... என்று பதிலளித்தது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், இந்த வெங்காயம் அடுத்த மாதம்(ஜனவரி)தான் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் வெங்காயம் விலை தங்கம் விலையை எட்டி விடும் போல் தெரிகிறது!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வெங்காயம் விலை உயர்ந்து வருவதால், தமிழக அரசு 70 பண்ணை பசுமை கடைகளின் மூலம் ரூ.40க்கு வெங்காயம் விற்பனை செய்தது. ஆனால், அது மக்களுக்கு போதவில்லை.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று(டிச.7) தரமான பெரிய வெங்காயம் கிலோ ரூ.160 முதல் ரூ.180க்கும், தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரைக்கும் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஈரப்பதத்துடன் மட்டமாக உள்ள வெங்காயம் விலை ரூ.130 முதல் ரூ.150 வரை கிடைக்கிறது.

இது குறித்து வெங்காயம் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு முன்பு தென்மாவட்டங்களில் இருந்தும், பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளில் இருந்தும் வெங்காயம் வந்தது.

ஆனால், தற்போது தமிழகத்தில் வெங்காயம் உற்பத்தி குறைந்து விட்டது. அதனால், மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் கர்நாடகாவின் பெல்லாரியில் இருந்து வெங்காயம் வருகிறது. கடந்த மாதம் வரை தினமும் 65 லோடுகள் வரை வந்தது. தற்போது விலை உயர்வு காரணமாக வியாபாரிகளே வெங்காயம் விற்பனையை குறைத்து விட்டனர். காரணம், சப்ளையாகும் வெங்காயம் சேமித்து வைக்கும் அளவுக்கு தரமாக இல்லை. அழுகிவிட்டால் நஷ்டமாகி விடும் என்பதால் வியாபாரத்தை குறைத்துள்ளனர். இதனால், 35 லோடுகள்தான் வருகின்றன. அதனால்தான் பொங்கல் வரை இந்த விலை உயர்வு இருக்கலாம் என்றார்.

You'r reading சென்னையில் வெங்காயம் விலை ரூ.200ஐ எட்டியது.. பல்லாரி கிலோ ரூ.180.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உத்தவ் முதல்வரான பின்பு மோடியுடன் முதல் சந்திப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்