திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 98வது பிறந்த நாள்.. ஸ்டாலின் நேரில் சந்திப்பு

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகனுக்கு இன்று 98வது பிறந்த நாள். முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், கட்சியின் பொதுச் செயலாளராக நீடித்து வரும் அன்பழகனை கட்சியின் மூத்்த நிர்வாகிகள் அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெற்று வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் வீட்டுக்கு சென்று சால்வை அளித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் சென்று அன்பழகனுக்கு வாழ்்த்து தெரிவித்தனர்.
முன்னதாக, ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருந்ததாவது:

கழகத்தின் பொதுச்செயலாளர்-அறிஞர் அண்ணா அவர்களின் அருமைத் தம்பி-தலைவர் கலைஞரின் இலட்சிய சகோதரர்- அவருடன் எல்லாக் காலமும் ஒன்றாகப் பயணித்து, கொட்டியும் ஆம்பலும் போல ஒட்டி உறவாடிய உன்னதமான தோழர் இனமானப் பேராசிரியர் அவர்களின் 98-வது பிறந்தநாள் (டிசம்பர் 19) சீரோடும் சிறப்போடும், எழிலோடும் ஏற்றத்தோடும், திராவிட இன - மொழி உணர்வோடும் கொண்டாடப்படுகிறது.

தனிநபர்களைவிட தத்துவமே பெரியது, ஏற்றுக் கொண்ட தலைமையே வலிமை மிக்கது, தன்மான இயக்கமே உயிருக்கு நிகரானது எனத் தனது மாணவப் பருவம் முதல் இன்று வரை செயலாற்றிச் சிறப்பு செய்து வருபவர் இனமானப் பேராசிரியர்.

திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் தேர்தல் களத்தைச் சந்தித்த 1957 பொதுத்தேர்தலில் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோருடன் வெற்றி பெற்ற 15 பேரில், நமது பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியரும் ஒருவர். அதன்பிறகு, வெற்றிகளையும் தோல்விகளையும் தேர்தல் களங்களில் சந்தித்திருந்தாலும், இரண்டையும் சமமாக ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று, திராவிட அரசியல் தத்துவப் பாடம் நடத்திய தகுதி நிறைந்த பெருமை பேராசிரியருக்கு உண்டு. சட்டமன்றத்தில் அவர் முன் வைத்த வாதங்கள் அழுத்தமானவை. நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய உரிமைக் குரல்கள் வலுவானவை. அமைச்சராக அவர் நிறைவேற்றிய திட்டங்கள் என்றும் பயனளிப்பவை. இவை அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஏந்தியிருக்கும் சித்தாந்தத்தின் வழியே செயல்படுத்திக் காட்டுவதில் பேராசிரியப் பெருந்தகை அவர்கள் உறுதியாக இருந்தவர்.

இளைஞரணிச் செயலாளராக இருந்த என்னிடம் பேராசிரியர் பெருந்தகை காட்டிய அன்பு கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக உயர்ந்த ஒவ்வொரு நிலையிலும் அப்படியே வெளிப்பட்டது. உங்களில் ஒருவனான நான் இன்று கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பினை சுமந்திருக்கும் நிலையிலும், அதே அன்பை, அன்பின் ஆழத்தை தன் உடல்நிலையையும் மீறி, உள்ளம் திறந்து வெளிக்காட்டி, உவகை கொள்ள, பேராசிரியர் அவர்கள் ஒரு போதும் தயங்கியதே இல்லை.

2018 ஆகஸ்ட் 7-ஆம் நாள் தலைவர் கலைஞர் அவர்களை இயற்கை சதி செய்து நம்மிடம் இருந்து பிரித்த நிலையில், என்ன செய்யப்போகிறோம், எப்படிச் செயலாற்றப் போகிறோம் எனத் தவித்து நின்றபோது, தந்தையின் இடத்திலிருந்து என்னை ஆறுதல்படுத்தி, அரவணைத்து, வாஞ்சையுடன் வழிகாட்டியவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியதிலிருந்தே எனக்கு ஆலோசனைகள் வழங்கி, இயக்கப் பணிகள் தொய்வின்றி நடைபெறச் செய்ததுடன், தலைவர் கலைஞர் அவர்களை அடிக்கடி சந்தித்து, அவரது இதயத்துக்கு இதமளித்தவர் இனமானப் பேராசிரியர்.

இப்போது அவரது உடல்நிலை தளர்ந்திருக்கிறது. இயல்பாக வெளியிடங்களுக்குச் செல்ல முடிவதில்லை. இருந்தபோதும், கழகத்தின் இலட்சிய முழக்கமாகத் திகழும் முரசொலி ஏட்டினைப் புரட்டிப் படிப்பதும், பொதுச்செயலாளராக அவர் ஒப்புதல் அளிக்க வேண்டியவற்றைக் கவனிப்பதும் தொடர்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

“சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ” என்கிற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகளைப் போல, சித்தாந்தச் சிங்கமாக கர்ஜித்த - இயக்கமே குடும்பம் எனக் கொண்ட - எப்போதும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத - நேற்றைய தலைமுறை முதல் நாளைய தலைமுறை வரை கடைப்பிடிக்க வேண்டிய இலட்சியத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிற இனமானப் பேராசிரியர் அவர்கள், திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களில் அதிக காலம் வாழ்ந்து அற்புதமாக வழிகாட்டிக் கொண்டிருப்பவர் என்ற பெருமையுடன், 98-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுடன் இணைந்து, உங்களில் ஒருவனான நானும் பேராசிரியரை வணங்குவதிலும் வாழ்த்துவதிலும் வற்றாத இன்பமும் வாடாத மகிழ்ச்சியும் அடைகிறேன்.

நூறாண்டு கடந்தும் சீரோடு வாழ இனமானப் பேராசிரியரை வாழ்த்தி வணங்கிடுவோம்!
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 98வது பிறந்த நாள்.. ஸ்டாலின் நேரில் சந்திப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரை அருகே அ.ம.மு.க நிர்வாகி வெட்டி கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்