`இவர் தானா அந்த இயக்குநர்? - புது பெயர் புது டீமுடன் ரெடியாகும் `வர்மா ரீஷூட்!

Varma changed as Adithya Varma

வர்மா படத்தின் புதிய இயக்குநர் மற்றும் மற்ற டெக்னீஷியன்கள் அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றத் திரைப்படம் `அர்ஜூன் ரெட்டி'. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த இப்படம் தெலுங்கை தாண்டி தென்னிந்திய மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பேசு பொருளானது. இதனால் பல்வேறு மொழிகளில் ரீ மேக் உரிமைக்கான போட்டி அதிகமாக இருந்தது. அந்தவகையில் இந்தப் படத்தின் தமிழக உரிமையை வாங்கியிருந்தவர் கேரள தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா. இவரும் நடிகர் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் விக்ரமின் மகன் துருவ்வை இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்த தீர்மானித்தனர். சேது படத்தின் மூலம் தனக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த இயக்குநர் பாலாவை வைத்து துருவ்வை அறிமுகப்படுத்த வேண்டும் என எண்ணிய விக்ரம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாலாவை அர்ஜுன் ரெட்டி ரீ மேக்கை இயக்கும் படி கேட்டுக்கொண்டார்.

அப்படி உருவான `வர்மா' படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. படம் காதலர் தினமான இந்த மாதம் 14ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனமான E4Entertainment , ``ஒரிஜினல் படமான அர்ஜூன் ரெட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் பாலா கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் வர்மாவை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை.

இதனால் படத்தை ரீ ஷூட் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளோம். அந்தப் படத்திலும் துருவ்தான் ஹீரோவாக நடிப்பார். ஆனால், படத்தை பாலா இயக்கமாட்டார். அவருக்குப் பதிலாக இந்தப் படத்தை வேறொருவர் இயக்குவார்" எனக் கூறி ஷாக் கொடுத்தது. மேலும் புதிய இயக்குநர் மற்றும் டெக்னீஷியன்களுக்கான தேடலில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டது. இந்த தேடல் முடிந்து தற்போது படத்தின் இயக்குநர், டெக்னீஷியன்கள் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூடவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வர்மா படத்தின் பெயர் மாற்றப்பட்டு ``ஆதித்ய வர்மா" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஒரிஜினல் படமான `அர்ஜுன் ரெட்டி’யின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இந்தப் படத்தை இயக்கவுள்ளார். அதேபோல் முதல்படத்தில் இசையமைத்த ரதனே இதற்கும் இசையமைக்க, பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்தூ இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தின் ரீஷூட் விரைவில் தொடங்கவுள்ளது.

You'r reading `இவர் தானா அந்த இயக்குநர்? - புது பெயர் புது டீமுடன் ரெடியாகும் `வர்மா ரீஷூட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செல்ஃபி காமிரா 32 எம்பி: விவோ வி 15 ப்ரோ அறிமுகம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்